சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது.
இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்தனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்தார். விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உலகம் முழுவதும் விநியோகம் செய்தது.
அண்ணாத்த திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் கைப்பற்றியது. இந்நிலையில், ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை Qube டிஜிட்டல் சினிமா புரொவைடர் கைப்பற்றியது. அண்ணாத்த (தமிழ்) - பெத்தண்ணா (தெலுங்கு) படத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா, ஐரோப்பா, மலேசியா, மிடில் ஈஸ்ட், வடக்கு அயர்லாந்து, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ரிலீஸ் ஆனது. சுமார் 1100+ வெளிநாட்டு திரையரங்குகளில் அண்ணாத்த படம் வெளியானது. அண்ணாத்த திரைப்படம் வெளிநாடுகளில் (ஐரோப்பா தவிர) ஒரே ஷோவில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக Qube டிஜிட்டல் சினிமா புரொவைடர் நிறுவனம் அதிகாரபூர்வமாக டிவிட்டரில் அறிவித்தது. இந்த படம் வெளிவந்து மூன்று வாரங்களில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தனது சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியிட்டது.
இன்று இப்படம் வெளியாகி 50வது நாள் ஆகும். இந்நிலையில் ஹூட் ஆப்பில் ரஜினி பேசியுள்ளார் அதில், "இந்த படத்துக்கு ரிவ்யூஸ் அவ்வளவு சாதகமாக இல்லை. படம் ரிலீஸான பிறகு சனிக்கிழமை நைட்டில் இருந்தே மழை. மழைனா சாதாரண மழை இல்லை. அந்த மாதிரி மழையை பார்த்து ரொம்ப நாளாச்சு. ஜனங்க நடமாடவே முடியல. அப்புறம் தியேட்டருக்கு எப்படி வருவது. இது ரிலீஸாகிட்டு 3 நாளுக்கு பிறகு ஆச்சு. தீபாவளிக்கு முந்தைய நாள் ஆகியிருந்தது என்றால் யார் வந்திருப்பாங்க தியேட்டருக்கு, கண்டிப்பாக படம் தோல்வி அடைந்திருக்கும். இது கூட ஆண்டவனுடைய செயல். சிவா, கலாநிதி மாறனின் நல்ல மனசால படம் நல்லா போச்சு. இந்த மழை வரலனா இன்னும் நல்லா போயிருக்கும்". என்று ரஜினி பேசியுள்ளார். மேலும் அண்ணாத்த படக்குழுவுக்கு தங்க செயின் அளித்துள்ளார். இதில் இயக்குனர் சிவா, டி. இமான், வெற்றி, ரூபன், மிலன், திலீப் சுப்பராயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.