இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் பற்றி 5ம் வகுப்பு பாட புத்தகத்தின் பொது அறிவுக்கான ‘ரேக்ஸ் டூ ரிச் ஸ்டோரீஸ்’ பாடத்தில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் ரஜினிகாந்த். தென்னிந்தியவையும் தாண்டி உலக திரைப்படத்துறையில் பஞ்ச் டயலாக்ஸ் என்றால், அனைவரின் மனதிலும் நிற்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய ஸ்டைலான நடிப்பிலும், பஞ்ச் டயலாக்குகள் மூலமும் ரசிகர்களை கவர்ந்தவர்.
இந்நிலையில், 5ம் வகுப்பு பாட புத்தகத்தின் பொது அறிவுக்கான ‘ரேக்ஸ் டூ ரிச் ஸ்டோரீஸ்’ பாடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த கேள்வி இடம்பெற்றுள்ளது. அந்த கேள்வியில், வறுமையில் வாடி, தங்களது கடின உழைப்பு விடா முயற்சியால் பணக்காரர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் உயர்ந்த உலக பிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் தொடர்பான கேள்வியில், கார்பெட்ண்டரில் இருந்து பஸ் கண்டக்டராகி பின் திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல், ஒரு கலாச்சார ஐகானாக திகழ்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியையும் கொண்டு கடுமையாக உழைத்தால், வாழ்கையில் முன்னேறலாம் என்ற பாடத்தை கற்றுத்தந்துள்ள ரஜினிகாந்த் அனைத்து தலைமுறையினருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.