தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறான உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது.
மு க ஸ்டாலினின் உங்களில் ஒருவன்...
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்க்கை வரலாற்றை உங்களில் ஒருவன் என்னும் பெயரில் பல பாகங்கள் கொண்ட புத்தகமாக எழுதி வருகிறார். அதில் முதல் பாகம் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி நந்தம்பாக்கத்தில் உள்ள 'சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வெளியிட்டார். இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த புத்தகத்தை பூம்புகார் பதிப்பகம் பதிப்பித்துள்ளது.
உங்களில் ஒருவன் பாகம் 1
உங்களது ஒருவன் பாகம் 1-ல் முதல்வர் ஸ்டாலின் தனது ஆரம்பகால வாழ்வைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் தனது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார். இந்த புத்தகம் வெளியாகி பரவலான வாசகர்களை சென்று சேர்ந்துள்ளது. பலரும் இந்த புத்தகத்தைப் படித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஸ்டாலினுக்கு போன் செய்து பாராட்டிய ரஜினிகாந்த்
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு போன் செய்து பாராட்டிப் பேசியுள்ளார். இதைத் தன்னுடைய டிவிட்டர் பகிர்ந்து கொண்டுள்ளாஎர் முதல்வர் ஸ்டாலின். அந்த டிவீட்டில் ‘உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!. உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!’ என நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் நீண்ட காலமாக நெருக்கமான நட்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதை இருவருமே பல மேடைகளில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.