தெலுங்கு சினிமாவில் உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.
இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா கட்டமனேனி நேற்று முன்தினம் காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.
80 வயதான கிருஷ்ணா, இதுவரை 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார்.
கிருஷ்ணா நடிகர் மட்டுமல்லாது வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். திரையுலகில் இவருடைய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1980-களில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.யானார். பின்னர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து முழுவதும் விலகினார்.
மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பல சினிமா பிரபலங்கள் மகேஷ் பாபுவை நேரில் சந்தித்து தங்களின் இரங்கல்களை தெரிவித்தனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து கிருஷ்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மூன்றாம் நாள் காரியம் நடைபெற்றது. இதில் மகேஷ் பாபு, மகேஷ் பாபு மனைவி நம்ரதா, மகேஷ் பாபுவின் மறைந்த அண்ணன் ரமேஷ் பாபு குடும்பத்தினர் மற்றும் மகேஷ் பாபுவின் சகோதரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் SSMB 28 படத்தின் இயக்குனர் த்ரிவிக்ரம் ஶ்ரீ னிவாஸ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இருந்து மகேஷ் பாபுவின் புகைப்படங்கள் வெளியாகின. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மகேஷ் பாபுவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். சோகம் கண்ணில் தெரிவதாகவும், தந்தையின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றும் ரசிகர்கள் பதிவிடடுள்ளனர்.