விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் இருந்து வருகிறது.
இத்துடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 8வது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் ஆதித்யா, ‘சக்தி கொடு’ பாடலை நிறைவு பாடலாக பாடி இருந்தார். ஆனாலும் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவருக்கு பலவிதமான கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இந்நிகழ்ச்சியின் சிறப்பு நடுவர்களுள் ஒருவராக இருந்த இசையமைப்பாளர் அனிருத் தமது பாராட்டையும் ஊக்கமளிக்கும் கமெண்டுகளையும் ஆதித்யாவுக்காக கொடுத்திருந்தார்.
இந்த கமெண்ட்டை பிரதானமாக எடுத்துக்கொண்ட ஆதித்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அதை பகிர, இதற்கு வலைதள வாசிகள் மீண்டும் எதிர் கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்.
அதில் ஒருவர், “அனிருத் போன்ற ஒரு இசையமைப்பாளர், பார்வையாளருக்கும் திருப்தி அளிக்குமாறும் அதே சமயத்தில் பங்கேற்பாளருக்கும் ஊக்கமளிக்கும் வகையிலும் பேச வேண்டிய சூழல் இருக்கிறது.
ஒரு மனித நேயத்துக்காகவே அவர் அப்படியான பாராட்டு மிக்க கமெண்டுகளை அளித்திருந்தார். மற்றபடி பார்வையாளர்களுக்கு நீங்கள் ஒரு பங்கேற்பாளர் தான். ஒரு கலைஞன் தன்னை பற்றிய விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, கற்க வேண்டும், அதன்பிறகு வளர வேண்டும்.
ஆனால் நீங்கள் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு மீண்டும் திருப்பி பதிலளிக்கும் போது உங்களுடைய முதிர்ச்சி இன்மை தெரிகிறது.
எங்களுக்கு உங்கள் மீது எந்தவிதமான வஞ்சகமும் இல்லை. நல்ல இசைக் கலைஞர்கள் போட்டியில் இருந்து வெளியேறும் பொழுது நாங்களே சம்பந்தப்பட்ட சேனலை கேள்வி கேட்பதுண்டு.
நீங்கள் வளர வேண்டுமென்றால் பார்வையாளர்கள் அல்லது ரசிகர்களின் கமெண்டுகளை ஒப்புக்கொண்டு, ஏற்றுக்கொண்டு வளருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஆதித்யா, “விஷயம் என்னவென்றால், நான் விமர்சனங்களை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் வெறுப்புகளை அல்ல. இங்கு நடந்து கொண்டிருப்பதற்கு நான் என் திறமையை நிரூபித்தால் மட்டும்தான் பதில் என்று நினைக்கிறேன்.
பார்வையாளர்களாக ஒரு விஷயத்தின் மீது கருத்து சொல்லும்போது உண்மையில் என்ன நடக்கிறது.. அதைச்சுற்றி.. என்பதை கவனத்தில் வைத்து கருத்து சொல்லவேண்டும். சும்மா கமெண்ட் செக்ஷனில் வந்து உங்கள் கணிப்புகளை கமெண்டாக கொடுத்துக் கொண்டிருக்க கூடாது” என்று காட்டமாக கூறியுள்ளார்.