இந்தியாவில் இதுவரை 2.40 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 கோடி பேர் இதுவரை குணமாகியுள்ளனர். சுமார் 2.6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் 16 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 33.3 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்டவற்றுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதலை வலியுறுத்தி தடுப்பூசி செலுத்தும் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மெட்ராஸ் சுழற்சங்கம் சார்பில் தமிழக மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், சுஹாசினி, மாதவன், அரவிந்த் சுவாமி, துல்கர் சல்மான், விக்ரம் பிரபு, அதர்வா முரளி, ராதிகா, நாசர் உள்ளிட்டோர் பேசிய விழிப்புணர்வு பிரச்சார வீடியோ சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு வீடியோவில், “கோவிட் தாக்கம் கடும்மையாக இருக்கு. இந்த கடினமான தருணத்தில் இருந்து நாம் வெளியே வரணும். நமக்கு சுய கட்டுப்பாடு வேணும். ஒரு சின்ன அலட்சியம் கூட பெரிய விபத்துகளை உண்டுபண்ணிடலாம்.
முகக்கவசம் அணிவது, கைகளை சோப்பு போட்டு கழுவதல், சமூக இடைவெளி உள்ளிட்டவை அவசியம். முக்கியம். இந்த சூழலில் நமக்கு நம்பிக்கை வெளிச்சமாக கிடைச்சிருக்கும் கோவிட் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பூசி நமக்கானது. பாதுகாப்பானது. கொரோனாவை எதிர்த்து போராடுவோம். இணைந்து செயல்படுவோம். கொரோனாவை வெல்வோம்!” என அவர்கள் சேர்ந்து குறிப்பிடுகின்றனர். இந்த பிரச்சார வீடியோ வைரலாகி வருகிறது.
ALSO READ: “தடுப்பூசி போட்டுக்கொண்டார் தலைவர்!!”.. ரஜினிகாந்த் மகள் வெளியிட்ட வைரல் புகைப்படம்!