தற்போது சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது. 2017 ஆம் ஆண்டு நியோ நோயர் வகைமையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது. நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் இது தான்.
ஸ்டூடியோ கிரீன் K. E ஞானவேல் ராஜா தயாரிப்பில், சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார்.
கொரோனா காரணமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L இணைந்துள்ளார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எடிட்டராக பிரவீன் கேல் பணியாற்றி இருந்தார். தமிழ்சினிமாவின் தலைச்சிறந்த இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளருமான பாலுமகேந்திரா அவர்களிடம் உதவி படத்தொகுப்பாளராக 'கதை நேரம்' தொடரில் பணியாற்றிய பெருமை கொண்டவர் பிரவீன் K.L. 'சரோஜா' படத்திற்காக தமிழக அரசின் சிறந்த படத்தொகுப்பாளர் விருதையும், 'ஆரண்யகாண்டம்' படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றவர் பிரவின்.K.L.
இவர் வித்தியாசமான திரைப்பட வகைமைகளுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். அவற்றில் சென்னை - 28 (Sports Drama), சரோஜா (Thriller), மங்காத்தா (Action Thriller), ஆரண்ய காண்டம் (Neo- Noir), அரவான் (Historical Epic Drama), காவியத்தலைவன் (Period Drama), கலகலப்பு (Comedy), என்றென்றும் புன்னகை (Romedy), மெட்ராஸ் (Political Drama), மாசு என்கிற மாசிலாமணி (Super Natural Horror), கொம்பன் (Action Drama), மருது (Action Drama) போன்ற படங்கள் முக்கியமானவை.