புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சர்வானந்துடன் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் 'அடவால்லு மீக்கு ஜொஹர்லூ' படத்தின் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவின் 'தேசிய க்ரஷ்' என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாக 'புஷ்பா’ படத்தில் 'சாமி சாமி' என்று ஆடிய நடனம் பட்டிதொட்டியெங்கும் கலக்கிக் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கும் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் ராஷ்மிகாவைப் போல் நடனம் ஆடி பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், என்னுடைய 'சாமி சாமி' பாடலுக்காக எனக்கு கிடைத்திருக்கும் அன்பு என்னை நெகிழச் செய்கிறது. இந்தப் பாடலை வெற்றிகரமாக மாற்றிய எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் நான் பெற்றிருக்கும் இந்த அன்பே இந்தப் பாடலை ஸ்பெஷலானதாகவும், நினைவுக்குரியதாகவும் என்று தெரிவித்தார்.
மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் மந்தனா சர்வானந்துடன் ஜோடி போட்டு நடித்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இயக்குனர் திருமலா கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அடவால்லு மீக்கு ஜொஹர்லூ' படத்தில் சர்வானந்த், ராஷ்மிகா மந்தனா, ராதிகா, குஷ்பு, ஊர்வசி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். SLV சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. நடிகர் சர்வானந்த் நடிப்பில் வெளியான கணம் படத்தின் டீசர், அம்மா பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார். இந்நிலையில், 'அடவால்லு மீக்கு ஜொஹர்லூ' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். காதல், டிராமா குடும்பங்கள் கொண்டாடும் படமாக பிப்ரவரி 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா படம் கொடுத்த வெற்றி ராஷ்மிகாவுக்கு புத்துணர்ச்சியை தந்துள்ள நிலையில், இப்படத்தின் வெற்றியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். அண்மையில், ராதிகா, குஷ்புவுடன் ராஷ்மிகா சேட்டை செய்யும் வீடியோவை ராதிகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.