நடிகர் அஜித் குமாருக்கும் தனக்கும் நடந்த எதிர்பாராத சந்திப்பு மற்றும் அப்போது அஜித் தம்மிடம் பேசியவற்றை பற்றி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய திரையுலக ரசிகர்களுள் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2 பிரம்மாண்ட படங்கள் ஜனவரியில் வெளியாகின்றன என்றால் அவை ஆர்.ஆர்.ஆர் மற்றும் வலிமை படங்கள்தான்.
இதில், வலிமை படத்தின் டிரெய்லர் தற்போது வேற லெவலில் வெளியாகி உள்ளது. போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் வெளியாகியுள்ள இந்த டிரெய்லரில் மெய்சிலிர்க்க வைக்கும் அட்டகாசமான ரேஸ் மாஃபியா, பொலீஸ் விசாரணை மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. முன்னதாக வலிமை பட பாடல்கள், கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் வலிமை மேக்கிங் வீடியோ உள்ளிட்டவை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், முதன்மை கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து 2022 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இதேபோல் ஜனவரி 7-ஆம் தேதி ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR The Movie) படம் வெளியாகவுள்ளது. DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் , இவர்களுடன் ஆலியா பட், Olivia Morris, சமுத்திரகனி, அஜய் தேவ்கன், ஸ்ரேயா, Alison Doody, Ray Stevenson ஆகியோர் நடித்துள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் டிரெய்லரும் அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான லைகா ஏற்கனவே வாங்கியிருந்தது.
இப்படத்தின் கதையை V.விஜயேந்திர பிராசத் எழுத, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார். மகரதமணி இசையமைக்க, K.K.செந்தில் குமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு சிரில் இப்படத்தின் கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் தமிழ் வசனத்தை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்த புரோமோஷன் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை மதியம் (ஜனவரி 2, 2022) 2:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது
ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாயகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் ராஜமௌலி கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், திவ்யதர்ஷினி பேட்டி எடுத்தார். அவரிடம் பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர் அஜித் குமாருக்கும் தனக்கும் ஒரு ஹோட்டலில் நடந்த திடீர் சந்திப்பு மற்றும் உரையாடல் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த ப்ரோமோ இப்போது வெளியாகியுள்ளது. அதில் பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, “ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பெரிய ரெஸ்டாரண்ட் இருக்கும். அங்கு சென்றபோது நடந்தது. அந்த நேரத்தில் அங்கு நிறைய பேர் இல்லை. அப்போது அஜித் அவர்கள் அங்கிருக்கும் ஒரு டேபிளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அவரை நான் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். ஆனால் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் உடனே எழுந்து வந்து விட்டார். என்னிடம் அருகில் வந்தவர், என்னை நலம் விசாரித்தார். நான் நெகிழ்ந்து போனேன். பின்னர் அவருடன் சென்று அவர் டேபிளில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் என் மனைவி தூரத்தில் இருந்து வந்தார். வந்தவர் எனது டேபிளில் என்னை தேடினார்.
ஆனால் நான் அவரை அழைப்பதற்காக திரும்பி கை காட்டினேன். அப்போது அதை கவனித்த அஜித் அவர்கள், ‘உங்கள் மனைவியா?’ என்று என்னிடம் கேட்டுவிட்டு, நான் ஆம் என்று சொன்னவுடன் எழுந்து சென்று, என் மனைவியை சந்தித்து மிகவும் தாழ்மையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் என் மனைவியை என்னிடம் அழைத்து வந்தார். எந்த அளவுக்கு பணிவுடன் இருக்கிறார். அந்த சந்திப்பும் உரையாடலும் சிறந்ததாக அமைந்தது.
அஜித் அவர்கள் சமீபத்தில் செய்ததில் நான் மிகவும் போற்றத்தக்க ஒரு விஷயம் இருக்கறது. அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் தல.. தல.. தல.. என்று சொல்லிக்கொண்டிருந்த போது, அவர் அந்த தல என்கிற வார்த்தையை தவிர்க்கச் சொல்லி, தான் அஜித்குமார் அல்லது ஏகே என்று சொன்னதுதான் .. அதற்காக அவருக்கு ஹேட்ஸ் ஆஃப் பண்ண வேண்டும் ” என்று பேசியுள்ளார்.