கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடித்த காவியப் புகழ்ப் பெற்ற படமான மூன்றாம் பிறையை இயக்கியவர் பாலு மகேந்திரா. இன்றளவும் இந்தப் படம் கல்ட் ஃப்லிம் என திரை ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எழுத்தாளர் அனுராதா ரமணனின் சிறுகதையை மையமாக வைத்து எழுதப்பட்ட சோகமான காதல் கதை இது. அன்பு மற்றும் பிரிவின் ஆறாத ரணத்தைப் பற்றிப் பேசிய படமிது.
இந்தப் படத்தில் விஜி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்தார். அவரது அப்பாவியான முகத்தோற்றமும், குரலும், சீனு சீனு என்று அவர் கமலைக் கூப்பிட்ட தொனியும், சுப்ரமணி என்று நாய்க்குட்டியை கொஞ்சிய அழகும் மூன்றாம் பிறை ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்தவை.
அதுவும் கடைசி சீனில் ரயிலில் அவர் இருக்க, கமல் ப்ளாட்பாரத்திலிருந்து அவரது கவனத்தை ஈர்க்க என்னன்னவோ செய்ய, பாவம் யாரோ பைத்தியம் என்ற முகபாவத்தை வெளிப்படுத்தியிருப்பார். இந்தக் காட்சியில் அழாதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு கமல் ஸ்ரீதேவி இருவரும் மூன்றாம் பிறையை ஒளிரச் செய்திருப்பார்கள்.
இப்போது, விஷயத்துக்கு வருவோம். இந்தப் படத்தில், பாக்யலட்சுமியின் அலையஸ் விஜி கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரீதேவி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான். இந்தக் கதாபாத்திரம் நடிகை ஸ்ரீப்ரியாவுக்குத்தான் முதலில் வந்தது. அவரே இது பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், 'மூன்றாம் பிறை படம் முதலில் எனக்குத்தான் வந்தது, சில சொந்த காரணங்களுக்காக நான் அதை மறுத்துவிட்டேன்’ என்று கூறினார்.
இன்னொரு நேர்காணலில், ஸ்ரீபிரியா அந்த கதாபாத்திரத்தை இழந்ததற்கு வருத்தம் தெரிவித்தார். “நான் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலு மகேந்திரா மற்றும் மணி ரத்னம் ஆகியோரின் ரசிகை. ஆரம்பத்தில் மூன்றாம் பிறையில் ஸ்ரீதேவி ஏற்ற கதாபாத்திரம் எனக்கு வழங்கப்பட்டபோது, அதை நான் மறுத்துவிட்டேன். ஆனால் இப்போது அதற்கு வருத்தப்படுகிறேன்." என்றார்.
ஒவ்வொரு அரிசியிலும் அதை உண்பவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்றொரு நம்பிக்கை பரவலாக உள்ளது. அதே போல திரைப்படங்களிலும் அந்தந்த கதாபாத்திரத்தில் அந்தந்த நடிகர்கள்தான் நடிக்க வேண்டும் என்று விதித்திருக்கிறது போலும். அவள் அப்படித்தான் படத்தில் மஞ்சு என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் ஸ்ரீபிரியா. இன்றுவரை மஞ்சுவின் முகமாக அவர் மட்டுமே இருக்கிறார்.