தமது பள்ளி காலத்தில் தானும் Slut Shaming, Casteism, Bullying, Body Shaming உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்ததாக 96 திரைப்படத்தில் குட்டி திரிஷாவாக நடித்த கௌரி கிஷன் தெரிவித்திருக்கிறார். அண்மையில் சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் காமர்ஸ் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகளை கொடுத்து வந்ததாக புகார்கள் மற்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இந்நிலையில் பல்வேறு திரை பிரபலங்களும் இதற்கு எதிராக தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டதுடன் பள்ளி நிர்வாகத்தினரை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் திரைத்துறை பிரபலங்களான பாடகி சின்மயி, நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி உள்ளிட்ட பலரும் இது பற்றி பேசி வருகின்றனர்.
இந்த பள்ளியின் பொருளாளர் என்ற முறையில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவருடைய மகள் மதுவந்தி இது தொடர்பான புகார் தங்கள் தரப்பை எட்டியதாகவும், தாங்கள் இதுபற்றி தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி மனம் திறந்த பிரபல நடிகை கௌரி கிஷன், தானும் தன் பள்ளியில் இப்படியான சிக்கல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
ALSO READ: “செவுள்ளயே வெக்கணும்.. வண்டை வண்டையா வாய்ல வருது!” - ஆசிரியரை சாடிய சீரியல் நடிகர்!
இதுபற்றி பேசியுள்ள அவர், “பள்ளி கால நினைவுகள் ஒரு நாஸ்டால்ஜியா போல் பலருக்கும் இருக்கும். ஆனால் என்னுடைய பள்ளி கால நினைவு அப்படி கிடையாது. என்னைப் போல பலரும் இப்படியான வலிகளை தொடர்ந்து அனுபவித்திருக்கிறோம். நான் சென்னை அடையாறில் இருக்கும் ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தேன். அங்கும் Slut Shaming, Casteism, Bullying, Body Shaming போன்ற சிக்கல்கள் தொடர்ந்தன என்னுடைய பல ஸ்கூல் மேட்களிடம் நான் பேசினேன். நாங்கள் இதுபற்றி நிறைய ஒரு உணர்வு புரிதலுக்கு வந்தோம். எங்களது பள்ளியிலும் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன.
நானும் கூட தனிப்பட்ட முறையில் இப்படியான எமோஷனலான பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறேன். ஆனால் இதற்கெல்லாம் தனிப்பட்ட முறையில் யார் காரணம் என பெயர் குறிப்பிட விரும்பவில்லை. என்னை மாதிரியே சிக்கல்களை பலர் சந்திக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். ஆனால் நேர்மையாக ஒரு விஷயம் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் குழந்தை மனநிலையில் சந்தித்த இந்த சிக்கல்களை இப்போது கடந்து வந்து விட்டோம். ஆனால் பலரும் தாங்கள் அந்த சூழலில் சந்தித்த சிக்கல்களின் உளவியலுக்குள் இன்னும் ஆட்பட்டு இருக்கின்றனர். அவர்களின் மனதிற்குள் அவை மிகவும் ஆழமாக பதிந்து இருக்கின்றன.
இப்போது இவற்றையெல்லாம் பேசுவது ஒரு மாதிரி இருந்தாலும் கூட ஒரு பெரும் பாரம் குறைந்தது போல் இருக்கிறது. நீங்களும் இதுபற்றி தயங்காமல் உங்கள் அனுபவத்தை மனம் திறந்து பேச வேண்டும். அப்போதுதான் நமக்கு அடுத்து வரும் தலைமுறை இப்படியான சிக்கல்களில் இருந்து மீள முடியும். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பேசுங்கள். குரல் கொடுங்கள்” என்று பேசியிருக்கிறார். இதேபோல் #SpeakUpAgainstHarrassment என்கிற ஹேஷ்டேகில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.