சென்னை, டிச.26 :- மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சிலை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்:
இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் திரைப்படத்தை இயக்கி வந்தார். லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்தபோது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எஸ்.பி.ஜனநாதன் மறைவு:
பின்னர், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ICU-வில் அனுமதிக்கப்பட்டபோது, நடிகர்கள் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். அதன் பின்னர், இயக்குநர் ஆறுமுகம் என்பவர், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், 2021, மார்ச் 14-ஆம் தேதி இருதயக் கோளாறால் காலமானார் என்கிற தகவலை அறிவித்தார். 61 வயதான எஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு திரையுலகம் அஞ்சலி செலுத்தியது.
எழுத்து, இலக்கியம், கொள்கை:
திரைப்படங்களை இயக்கியதுடன், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைப்படத்துக்கு கதை எழுதினார். பிரபல ரஷ்யன் எழுத்தாளர் தஸ்தோவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ நாவலின் பிரியரான இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை திரைப்படத்தில், அந்த நாவலின் தன்மை உணரமுடியும். இதேபோல், பேராண்மை திரைப்படத்திலும் அந்த நாவல் குறித்து ஜெயம் ரவி ஒரு இடத்தில் பேசியிருப்பார்.
மேலும் கம்யூனிச கொள்கையில் ஈடுபாடுடைய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பின்னாளில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடித்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் அதை பிரதிபலித்திருப்பார்.
எஸ்.பி.ஜனநாதன் சிலை திறப்பு:
இந்நிலையில் சென்னையில் நடந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சிலை திறப்பு நிகழ்வில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, நடிகர் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் பங்கேற்றதுடன், மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு அஞ்சலி செலுத்தி பின்னர் சிலையை திறந்துவைத்தனர்.
விஜய் சேதுபதி மற்றும் திருமாவளவன் பங்கேற்பு:
எஸ்.பி.ஜனநாதன் சிலை திறப்பு நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அரசியலாளர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்களும், இந்த நிகழ்வில் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.