தமிழ், தெலுங்கு, இந்தி இன்னும் பிற மொழிகள் என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பத்மவிபூஷன் எஸ்பி பாலசுப்ரமணியம். 2020 செப்டம்பர் 25-ஆம் தேதி மறைந்த எஸ்பிபிக்கு ஒரு ட்ரிபியூட் பாடல்
தற்போது உருவாகியுள்ளது. Star Music லேபிளில் வெளியாகியுள்ள இந்த பாடலை குட்டி ரேவதி எழுதியுள்ளார்.
இந்நிலையில் காத்தாடி மேகம் என்கிற இந்த பாடலுக்கு இசையமைத்த விக்னேஷ்வரன் கல்யாணராமன் இதுகுறித்து பேசியுள்ளார். அதில், “நான் என்றென்றும் போற்றும் ஒரு அனுபவ மேதை அவர். இந்த பாடலை அவருக்காக இசையமைத்தது எனக்கு ஒரு ரசிகனின் தருணம். நிச்சயமாக, நான் இசையை ரசித்து கொண்டாடி வளர்ந்தேன், எஸ்பிபி சாருடன் பணியாற்றுவது எனக்கு ஒரு நீண்ட கனவு.
கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நான் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்தபோது, அவருடன் எனது முதல் நினைவலைகள், சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்கிறது, அங்கு அவர் தொடர்ந்து வந்து அவரது பாடல்களைப் பதிவுசெய்வார். குறிப்பாக, 100 வருட இந்திய சினிமா தொகுப்புக்கு அவர் இசையமைத்த பாடலுக்கான சவுண்ட் இன்ஜினியராக எனது பெயர் அவரது நாட்குறிப்பில் முதலிடத்துக்கு சென்றது.
எஸ்பிபி சாருடன் ஒரு சுயாதீனமான தனிப்பாடலில் பணியாற்ற நான் கடுமையாக விரும்பினேன். அவர் இதற்கு முன்னர் பல திரைப்படமல்லாத ஆல்பங்களில் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அவை அனைத்தும் ஆன்மீக மற்றும் பக்தி பாடல்கள். பின்னர், நாங்கள் வேறு திட்டத்தில் ஒன்றாக வேலை செய்யும் போது குட்டி ரேவதி மேடமுடன் இந்த யோசனையைப் பகிர்ந்து கொண்டேன்.
நான் எஸ்பிபி சாரை அணுகியபோது, ஆரம்பத்தில் இது ஒரு திரைப்பட பாடல் அல்ல என்று கூறப்பட்டபோது அவருக்கு ஒரு தயக்கம் இருந்தது. அவர் அமெரிக்காவில் இருந்தபோது நான் ட்ராக் அனுப்ப வேண்டியிருந்தது, அந்த ட்ராக்கை கேட்டபின், அவர் தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.
பின்னர், அவர் இசைஞானி இளயராஜா சாரின் பல இசை நிகழ்ச்சிகளில் கலந்த்கொண்டார். நான் நான்கு-ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இருப்பினும், ஒரு இசை நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டபோது அவர் இந்த பாடலை பாடி பதிவுசெய்தார். நான் முற்றிலும் மயக்க நிலை அடைந்தேன். அவர் என்னை அழைத்து, "நல்ல திறமையாளர் நீங்கள்" என்று கூறி பாராட்டினார், மேலும் அவர் இந்த பாடலைப் பாடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
தவிர, நான் அவரையும் இந்த பாடலுக்காக படமாக்க விரும்பினேன். அவரை இழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாம் அனைவரும் அதிர்ச்சியடைந்த நேரம் என்பதாலும், நான் அவரை கொண்டு எவ்வித அனுதாபத்தையும் பெற்று இந்த பாடலை வெளியிட்டு வரவேற்பைப் பெற நினையவில்லை. அதனால் ரிலீஸை தள்ளிவைத்து அவரது பிறந்தநாளை முன்னிட்டு இப்பாடலை வெளியிட முடிவு செய்தேன். ” என குறிப்பிட்டுள்ளார்.