வெகு சில நடிகர்களால் மட்டுமே எந்த ரோலில், எப்படி நடித்தாலும் பொருந்திப் போக முடியும். ''ஓ மை கடவுளே'' படத்தில் காமெடி, சீரியஸ், ரொமான்ஸ், நட்பு செண்டிமெண்ட் என ரசிகர்களுக்கு ஜுகல்பந்தி படைத்த அசோக் செல்வனை அந்த வகையில் சேர்க்கலாம். முகத்தில் ஒரு ப்ரெஷ்னெஸ், எப்போதும் ஒரு கூல் புன்னகையுடன் கோலிவுட்டில் தன் அடுத்த இன்னிங்க்ஸைத் தொடங்கியிருக்கும் அசோக் செல்வனிடம் பேசினோம். ''சூது கவ்வும்'' படத்தில் தொடங்கி ''ஓ மை கடவுளே'' வரையிலான தனது ரோலர் கோஸ்டர் அனுபவங்களைப் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்
உங்க ஆரம்ப கால படங்கள்ல எழுத்தாளர், டிடெக்டிவ் போன்ற மெச்சூர்ட் ரோல்கள்ல நடிச்சீங்க. இப்ப ஆறு வருஷம் கழிச்சு ''ஓ மை கடவுளே'' படத்துல காலேஜ் பையனா நடிக்கறீங்க. இது முரணா தெரியுதா? எப்படி உங்க கதாபாத்திரங்களை தேர்வு செய்யறீங்க?
அப்பவும் சரி, இப்பவும் சரி என்னோட ரோல் பிடிச்சிருந்தா அந்த படத்தை செலக்ட் பண்ணுவேன். ''ஓ மை கடவுளே'' உட்பட எல்லா கதையும் பிடிச்சுதான் பண்றேன். சினிமா பேக்கிரவுண்ட் இருந்து இந்த ஃபீல்ட்டுக்குள்ள வந்தா ஒரு ஜாலியான காலேஜ் பையன், ஆக்ஷன் ஹீரோ போன்ற ரோல்களை நான் எனக்காக தேர்ந்தெடுத்து நடிச்சிருக்க முடியும். ஆனா எனக்கு அப்படி எந்த பேக்கிரவுண்டும் கிடையாது. என் ஃபேமிலில யாருக்கும் சினிமால இல்லை. அதனால எனக்கு வாய்ப்புகள் கிடைக்கிறதுதான் ரொம்ப முக்கியம். அப்படி வரும்போது, அந்தந்த இயக்குநர்கள்கிட்ட கதை கேட்பேன், கதை பிடிச்சிருந்தா உடனே ஓகேதான். அப்படிதான் வில்லா, தெகிடி போன்ற படங்கள்ல என் வயசுக்கு மீறிய ரோல்கள் பண்ணேன். அதுக்கான மேக் அப், ஹோம் வொர்க் பண்ணித்தான் நடிச்சேன். ஓ மை கடவுளே படத்துல யெஸ், எனக்கு அந்த ரோல் டெய்லர் மேடா அமைஞ்சது. வர்ற வாய்ப்பை சரியா பயன்படுத்துக்கிறது முக்கியம்னு நினைக்கறேன். இப்ப லவ் படங்கள் பண்ணுங்கன்னு சொல்றாங்க. பண்ணா நல்லாதான் இருக்கும். ஆனால் ஸ்டிரீயோ டைப்ல சிக்கிக்க விரும்பல. வெரைட்டியான ஜானர்ல படம் பண்றது எனக்கு எப்பவும் பிடிச்சிருக்கு. அதுக்குன்னு லவ் படம் பண்ண மாட்டேன்னு இல்லை. நடிக்கறதுக்குன்னு வந்தாச்சு, எல்லாம் கலந்து கட்டி நடிக்க வேண்டியதுதான்.
ஒரு படத்தோட வெற்றி எதுனால தீர்மானிக்கப்படுதுன்னு நினைக்கறீங்க?
இதுல நிறைய விஷயங்கள் உள்ளடங்கி இருக்கு. அது எல்லாத்தையும் விட சூழல் சரியா இருக்கணும். நான் நடிச்ச ''கூட்டத்தில் ஒருவன்'' நல்ல படம். ஆனா அது ரிலீஸ் ஆன டைம்லதான் சினிமா டிக்கெட் ரேட்டை அதிகப்படுத்தினாங்க. அந்த வாரத்துல மக்கள் தியேட்டருக்கு வர்றது கணிசமா குறைஞ்சது. இந்த சிக்கலால, நாங்க எதிர்ப்பார்த்த அளவுக்கு படம் ரீச் ஆகலை. அதே போல, என்னோட இன்னொரு படம் 144 -அந்த சமயத்துல சென்னை flood. மக்கள் வெளியவே வர முடியாத டைம் அது. ''ஓ மை கடவுளே’’ ரிலீஸ் ஆகி நல்லா போயிட்டிருக்கு, இதுவே கொரோனா பிரச்னையால தியேட்டர்கள் மூடப்பட்ட அன்னிக்கு ரிலீஸ் ஆகியிருந்தா அவ்வளவுதான். ஸோ, ஒரு படத்தை எல்லா சவால்களையும் கடந்து எடுத்து முடிக்கறது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் ரிலீஸ் பண்ற டைம். ரெண்டும் சரியா இருக்கணும். அப்பதான் வெற்றி தோல்வியையே நிர்ணயிக்க முடியும்.
கூட்டத்தில் ஒருவன் படத்தில் வித்யாசமான ஒரு காரெக்டர்ல நடிச்சிருந்தீங்க, ஒரு மிடில் பென்ச்சர். வெற்றியும் இல்ல தோல்வியும் இல்ல, நடுவுல நிக்கற ஒரு கதாபாத்திரத்துல நடிச்சீங்க, இந்தப் படம் உங்களுக்கு என்னவா இருந்துச்சு?
இயக்குநர் த.செ.ஞானவேல் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். என்னோட காரெக்டர் ரொம்ப வித்யாசமா இருந்ததால உடனே ஓகே சொல்லிட்டேன். படம் பெரிய ஹிட் அடிக்கலைன்னாலும் எனக்கு நல்ல படத்துல நடிச்ச ஒரு திருப்தி இருக்கு. படம் ரிலீஸான அன்னிக்கு உதயம் தியேட்டர்ல நைட் ஷோ பாக்கப் போனேன். படம் முடிஞ்சதும், நடுத்தர வயசு மனுஷர் ஒருத்தர் சீட்லேர்ந்து எழுந்து போகாம அழுதுட்டு இருந்தார். அந்த நிமிஷம் எனக்கு தோணிச்சு, இது போதும்... நான் என்னோட நேரத்தை சரியாதான் செலவழிச்சிருக்கேன். வெற்றி நிச்சயம் ஒரு நடிகருக்குத் தேவை. கமர்ஷியல் ஹிட்தான் அடுத்த கட்டத்துக்கு தூக்கிட்டுப் போகும், ஆனாலும் இது போன்ற மனநிறைவுகள்தான் ஒரு நடிகனா என்னை ஊக்குவிக்குது. எனக்கு ரெண்டுமே முக்கியம்.
பிரியதர்ஷன் இயக்கத்துல சில சமயங்களில் படம் பண்ணியிருக்கீங்க. அது இந்தியாவில் முதல் நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினல்தானே? OTT platform பத்தி என்ன நினைக்கறீங்க?
தொடர்ந்து சினிமால இருக்கலாமான்னு எனக்குள்ள ஒரு கேள்வி இருந்த சமயத்துலதான் ''சில சமயங்களில்’’ பட வாய்ப்பு வந்தது. பிரியதர்ஷன் சார் ஒரு லெஜெண்ட் அவரோட படம் எனக்கு கிடைச்சது மிக சரியான டைம்ல. எனக்கு அது ஐ ஓபனர். காரணம் அந்தப் படத்துல நடிச்சதுக்கு அப்பறம்தான் எனக்கு பெரிய கான்ஃபிடென்ஸ் உருவாச்சு. இனி தொடர்ந்து நடிக்கலாம்னு முடிவு பண்ணேன். அவர்கிட்டேர்ந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். வித்யாசமான ஷூட்டிங் அனுபவம் கிடைச்சது. இந்தப் படம் தியேட்டர்ல ரிலீஸாகும்னுதான் ஆசைப்பட்டேன். ஆடியன்ஸ் ரியாக்ஷனை அப்பத்தான் நேர்ல பாக்க முடியும். ஆனாலும் எனக்கு சந்தோஷம்தான். ஏன்னா இதுதான் இந்தியாவோட முதல் நெட்ப்ளிக்ஸ் ஒரினினல் படம் (India's first Netflix Original), அதோட உலகம் முழுக்க இந்தப் படத்துக்கான ரசிகர்கள் உருவாகிட்டே இருக்காங்க. டிஜிட்டல் ஃப்ளாட்ஃபார்மோட பெரிய அட்வாண்டேஜ் இதுதான். எனக்கு இப்ப ஃப்ரான்ஸ், லண்டன்னு வெளிநாடுகள்ல் நிறைய ரசிகர்கள் இருக்காங்க. அவங்க படம் பார்த்துட்டு பாராட்டறப்ப ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
''ஓ மை கடவுளே’’ படத்துல கிட்டத்தட்ட எல்லாருமே யங் டீம். எப்படி இருந்துச்சு ஷூட்டிங் அனுபவம்?
ரொம்ப என்ர்ஜிட்டிக்கா இருந்தது. எல்லாருமே லைக் மைன்டெட்டா இருந்ததால ஒருத்தர் மேல மத்தவங்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஒரு நல்ல comfort zone-ல வேலை பார்த்தோம். ஸ்கிரிப்ட் வொர்க்கு ஒரு வருஷம் ஆச்சு. இது என்னோட சொந்த புரொடக்ஷன் வேற, அதனால கொஞ்சம் கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன். டெல்லி பாபு இதுக்கு ஃபண்ட் பண்ணினார். ஷூட்டிங் தொடங்கினதும் எங்களுக்குள்ள ஒரு வைப் கிரியேட் ஆச்சு. ஸோ பயந்த அளவுக்கு ஸ்ட்ரெஸ் எல்லாம் இல்லை. ஆனால் அதே சமயம் வொர்க் ப்ரெஷர் இருக்கும். டைரக்டர் அஷ்வன்த் மாரிமுத்து எனக்கு நீண்ட கால நண்பர். அவர் இந்தப் படத்துலயும் சரி, ஷூட்டிங் டைம்லயும் சரி எனக்கான ஸ்பேஸை உருவாக்கித் தந்தார். அதனால நினைச்சதை செயல்படுத்தக் கூடிய சுதந்திரம் கிடைச்சது. எல்லா விஷயங்களையும் ஓரளவுக்கு நிதானமா கவனிச்சு பண்ணதால பெர்ஃபெக்ஷன் இருந்தது. ரித்திகா, வாணி இவங்க ரெண்டு பேருமே ஈகோவே இல்லாதவங்க. இந்த அனுபவம் ஒன் டைம் இன் லைஃப்னு சொல்லலாம். மனசுக்கு நிறைவா இருந்துச்சு. படத்துல நடிச்ச ஒவ்வொருத்தரும் தங்களோட பங்களிப்பை ரொம்ப அழகா பண்ணிணதால, ஆடியன்ஸுக்கு எந்த சீனும் அலுக்கலை. ரெண்டரை மணி நேரம் படத்தோடவே இருந்தாங்க.
அசோக் செல்வன் மக்கள் செல்வன் என்ன மேஜிக்?
அவரோட நடிச்சதே ஒரு மேஜிக்தான். பொதுவா இந்த மாதிரி ஃபேண்டஸி விஷயங்களை மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. ரொம்ப பிடிச்ச ஆள் நடிச்சாதான் பாக்கவே வருவாங்க. விஜய் சேதுபதி மக்களோட ப்ளெண்ட் ஆன ஒருத்தர். அவரால மட்டும்தான் இந்த ரோலைப் பண்ண முடியும்னு நினைச்சோம். அவரால்தான் இந்த ரோலை எல்லாரும் ரசிச்சாங்க. எனக்கு அவரை பர்சனாலாவும் ரொம்ப பிடிக்கும். ஐ லவ் ஹிம். அவரோட சேர்ந்து நடிச்சப்ப, ஒரு ஆக்டர் எப்படி ஒரு craft-டை தன் கண்ட்ரோல்ல வைக்கலாம்ங்கறதை கத்துக்கிட்டேன். அவர் அதை ரொம்ப இயல்பா பண்றார்.
சூது கவ்வும், வில்லா, தெகிடி, OMK உங்க படங்களோட தலைப்புகளே வித்யாசமா இருக்கே. இது அமைஞ்சதா? எப்படி இருக்கு உங்களோட திரைவழிப் பயணம்?
படம் வெளிவந்த சமயத்துல என்னோட பட டைடில்கள் புரியலைன்னு நிறைய பேர் திட்டியிருக்காங்க. அதென்ன சூது கவ்வும்? சில பேருக்கு அது வாய்லேயே நுழையல. அதே மாதிரிதான் வில்லா...தெகிடி. அப்படின்னா என்னன்னு என்கிட்ட கேள்வி கேட்டுருக்காங்க. இந்த டைட்டில் எல்லாம் ஸ்டைலிஷ்ஷா இருக்குன்னு சொல்றவங்களும் இருக்காங்க. அது அவரவர் பார்வைல இருக்கு. எல்லாமே அமைஞ்சதுதான். இதுல என்னோட ரோல் எதுவுமில்லை. திரைப் பயணம் பரபரப்பா போகுதுங்க. ''ஓ மை கடவுளே'' படத்துல என்னோட நடிப்புக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க. அடுத்தடுத்து நல்ல படங்கள் பண்ணனும்னு பொறுப்பா ஃபீல் பண்றேன். மார்ச் 26-ம் தேதி வெளியாகி இருக்க வேண்டிய மலையாளப் படம், மரக்கார் அரபிகடலிண்டே சிம்ஹாம். கொரோனா பிரச்னையால ரிலீஸ் தள்ளிப் போயிருக்கு. மோகன்லால் ஹீரோவா நடிக்கற இந்தப் படம் ஒரு ஹிஸ்டாரிக்கல் மூவி. நான் இதுல வில்லனா நடிச்சிருக்கேன். இது தவிர வேழம், ரெட் ரம், செனோரீட்டா ஆகிய படங்கள்ல நடிச்சிருக்கேன். நித்யா மேனனோட ஒரு நேரடித் தெலுங்குப் படத்துலயும் நடிக்கறேன். இன்னொரு படம் பேச்சு வார்த்தைல இருக்கு. சீக்கிரம் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் ஆல்ரவுண்டராக மாறியிருக்கும் அசோக் செல்வனுக்கு ஆல் தி பெஸ்ட்!