ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.
விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பணிபுரிந்து, நடித்தவரும், டாணாக்காரன் திரைப்படத்தின் இயக்குநருமான தமிழரசன் (எ) தமிழ் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளத்துக்கு பிரத்தியேக பேட்டியை அளித்துள்ளார்.
அதில், பேசிய அவர், நடிகர் சூரி குறித்தும், சண்டைக்காட்சி குறித்தும் பேசும்போது, டிரெய்லரில் சூரிக்கு தலையில் அடிபடுவதாக வரும் கிளைமாக்ஸ் காட்சி 15 நாட்கள் படமாக்கப்பட்டதாகவும், நிஜமாகவே அந்த காட்சியில் அவரது தலையில் அடிபட்டதாகவும் அதற்கு காரணம், ரோப் மிஸ் ஆனதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு சூரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு பிரச்சனையும் இல்லை என தெரிவித்துவிட்டார்கள் என குறிப்பிட்டவர், முன்னதாக சூரிக்கு கையில் அடிபட்டு கையை தூக்க முடியாதளவாய் இருந்ததாகவும் அதனால் நடிகர் சூரி வொர்க் அவுட் கூட பண்ண முடியாமல் ஒல்லி ஆகிவிட்டதாகவும் அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் இப்படத்துக்காக சூரி தயாராக இருந்ததாகவும் தமிழ் குறிப்பிட்டுள்ளார்.