பிரபல கன்னட நடிகையும், மாடலுமான சோனியா அகர்வால் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நடிகைகள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தனர்.
இந்நிலையில்தான், போதைப்பொருள் விற்பனையாளரான, நைஜீரியாவை சேர்ந்த தாமஸ் என்பவரை பெங்களூருவில் கடந்த 12-ஆம் தேதி போலீசார் கைது செய்திருந்தனர். இது தொடர்பான விசாரணையில் கன்னட நடிகையும், மாடலுமான சோனியா அகர்வால் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து, பெங்களூரு ராஜாஜி நகரில் சோனியா அகர்வாலின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போதைப்பொருள் கைப்பற்றதாக கூறப்பட்டதை அடுத்து, பெங்களூரு நட்சத்திர ஓட்டலில் இருந்த நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தில் பிரபல தமிழ் படங்களான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த சோனியா அகர்வால் பெயரை தவறுதலாக சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதை அறிந்த நடிகை சோனியா அகர்வால், தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் “இங்கு சில மீடியாக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்யத் தயங்குவதில்லை. எந்த விசாரணையும் செய்யாமல், ஒரு நபரை பற்றி அவதூறாக செய்தியை வெளியிட ஆர்வமாக உள்ளனர் . ஆனால், என் வீட்டில் ரெய்டு நடந்ததாகக் கூறும் அதே நேரத்தில் நான் கேரளாவில் எனது புதிய படத்துக்கான படப்பிடிப்பில் இருக்கிறேன்.” என தம் கண்டனத்தை குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “இந்த அவதூறுக்காக சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பேன், காலை முதல் தொடர்ச்சியான அழைப்புகள் மற்றும் செய்திகளால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இந்த மன வேதனை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
‘காதல் கொண்டேன்’ நடிகை சோனியா அகர்வால் அடுத்ததாக தமிழ் & மலையாளம் மொழிகளில் உருவாகும் Grandma எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஷிஜின்லால் இயக்குகிறார்.
Also Read: சோகம்!! இளம் பிக்பாஸ் வின்னர் & தமிழில் ஒளிபரப்பான பிரபல சீரியலின் நடிகர் மரணம்!