வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா மிரட்டியுள்ள திரைப்படம் மாநாடு.
டைம் லூப் படமாக நல்ல விமர்சனங்களை பெற்று வரும் மாநாடு திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், வாகை சந்திரசேகர், மனோஜ், உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சுரேஷ் காமாட்சிடின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்துள்ள மாநாடு திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பு பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து திரையரங்கில் 2021, நவம்பர் 25-ஆம் தேதி நேரடியாக வெளியாகியுள்ளது.
குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றும் பின்னணி இசையில், பிரவீன் கே.எல்-லின் எடிட்டிங்கில் மாநாடு திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவின் நேர்த்தியான திரைக்கதையில் படம் அதிக பாராட்டுகளை குவித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உட்பட முன்னணி நடிகர்கள் பலரும் மாநாடு திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மாநாடு படத்தின் செலிபிரிட்டி சிறப்பு காட்சி திரையிடலின்போது, இயக்குநர் வெங்கட் பிரபு பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார்.
இந்த பேட்டியில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக அறிகிறோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் மீண்டும் திரையரங்கில் வந்து படம் பார்ப்பதை பார்க்கும் பொழுது.
குறிப்பாக இந்த மழை நாட்களில், கனமழையையும் பொருட்படுத்தாமல், தியேட்டரில் ஹவுஸ் ஃபுல்லாக இருப்பதாக கூறுகிறார்கள். தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாகர் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி மக்கள் மகிழ்ச்சி ஆகியுள்ளனர் என்பதில் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இறைவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.
மேலும் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது டாக்டர் திரைப்படம் தான். அப்படம்தான் தியேட்டரில் வெளியாகத் தொடங்கி, பின் அனைத்து படங்களும் திரையரங்கில் வெளியாகக் காரணமாக இருந்தது” என்று சிவகார்த்திகேயன் நடிப்பில், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் திரைப்படத்தை பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் மாநாடு திரைப்படத்தின் அனைத்து கலைஞர்களையும் குறிப்பிட்டு பாராட்டி ட்வீட் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.