நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வந்திருக்கிறது.
இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இத்திரைப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், இப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
இந்த பட விழாவில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மொத்தப் படத்தையும் தான் சுமந்து, படத்தின் மீது எந்த சுமையும் விழாமல் காப்பாற்றியிருக்கிறார். கொடுத்த வாக்குப்படி அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறார்.
வெங்கட் பிரபு சார், இந்த கதையை சொன்னபோது கட்டிப்பிடித்து என்னுடைய சந்தோஷத்தை தெரிவித்தேன். அவர் எப்போதும் டென்ஷனான சூழலில் கூட கூலாக தான் வெளிப்படுத்துவார். அவர் நிச்சயமாக இனிமேல் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பான் இந்தியா திரைப்படம்தான் எடுக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பேன். 10 படம் ஒரே நேரத்தில் எடுத்தால் எப்படி கான்சன்ட்ரேசன் செய்ய வேண்டுமோ.. அப்படித்தான் இந்த படத்தில் செய்திருக்கிறார்” என்று பேசிய எஸ்.ஜே.சூர்யா, பட குழுவினருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் கூறினார்.
இதேபோல் பிரேம்ஜி அமரன் தான், இந்த திரைப்படத்தில் ஸ்டார் என்று கலகலவென்று பேசிய எஸ்.ஜே.சூர்யா, இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயினை விட தனக்கும் சிம்புவுக்கும் தான் கெமிஸ்ட்ரி இருப்பதாகவும், அதேபோல், தான் என்றைக்குமே வில்லன் கிடையாது .. ஹீரோதான் என்றும் கூறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தற்போது பொம்மை, கடமையை செய் உள்ளிட்ட திரைப்படங்களில் எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாபாத்திரங்களிலும், மாநாடு, டான் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் நடிக்கிறார். இவற்றைத் தவிர ஒரு வெப் சீரிஸிலிலும் நடித்து வருகிறார்.
மேலும் சிம்பு குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா, டி ராஜேந்தர் ஸ்டைலில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, “சிம்பு சாருக்கும் எனக்கும் ஒரே நேரத்தில் எல்லாம் நடக்கும். சிம்பு சார் நல்லா இருந்தால், நானும் நல்லா இருப்பேன். அவருக்கு நேரம் ஒத்துழைக்கவில்லை என்றால் எனக்கும் அப்படித்தான் இருக்கும். எங்கள் இருவருக்கும் அப்படி ஒன்று உண்டு. சில நாட்கள் அவர் நடிக்காமல் இருந்தார். அதுவும் நல்லதுக்குதான். ராமனுக்கே 14 வருஷம் ஆச்சு. இது நம்ம எஸ்.டி.ஆர் தானே? தீபாவளியன்று மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் மாநாடு படம் வரும் அன்றைக்கு தான் ரசிகர்களுக்கு தீபாவளி!” என்று உற்சாகமாகப் பேசினார்.