ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.
இந்த டாஸ்கில் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்படும் அளவுக்கு விபரீதங்கள் நடக்கின்றன. குறிப்பாக போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து எதிரணியில் இருக்கும் போட்டியாளர்களின் பொம்மைகளை எடுத்துக்கொண்டு சில நேரம் டால் ஹவுஸில் சென்று வைக்கவும் சில நேரம் டால் ஹவுசுக்கு செல்லாமலும் இருக்கின்றனர். அப்படி செல்லும் பொழுது சிலர் அதை தடுக்கவும் செய்கின்றனர். இவ்வாறு தடுக்கும் போது ஏற்படக்கூடிய தள்ளுமுள்ளுவில் ஷெரினா விழுந்து தலையில் அடிபட்ட சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நிவாஷினியும் விழுந்து அடிபட்டார்.
இதுதொடர்பாக பிக் பாஸ் வீட்டுக்குள் சலசலப்பு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக ஷிவின் மற்றும் தனலட்சுமி இருவரும் மகேஸ்வரியிடம் வாதம் செய்தனர். அதில் தனலட்சுமி தன் தரப்பு நியாயமாக, அசீம்தான் அனைவரையும் தள்ளி விட்டார் என்று வாதத்தை முன்வைக்கிறார். அப்போது மகேஸ்வரி அதற்கு எதிர் நிலையில் இருந்து பேசுகிறார். அந்த சமயத்தில்தான் மகேஸ்வரிக்கும் ஷிவினுக்கும் வாக்குவாதம் வலுக்கிறது. ஒரு கட்டத்தில் ஷிவின் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு தான் பேசுகிறீர்கள் என்றால், “ஒரு ஆள் அத்தனை பேரையும் பிடித்து தள்ளிவிட்டாரே.. அதை ஏன் பார்க்கவில்லை? வாயை மூடி விட்டு போங்கள் .. கேவலமாக வாதம் செய்யாதீர்கள்!” என்று கூறுகிறார்.
அப்போது மகேஸ்வரி, “என்னை வாயை மூடிக் கொண்டு போக சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது. நீங்களும் பேசலாம் நானும் பேசலாம்.. நீங்கள் என்ன வேணாலும் பேசும்போது நான் ஏன் பேசக்கூடாது?” என்று குறிப்பிட்டதுடன், தொடர்ந்து, “தள்ளிவிட்டது நீங்கள் எல்லாம்தான்.. நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். நான் எல்லாவற்றையும் சரியாக பார்த்து தான் பேசுகிறேன்” என்று கூறுகிறார்.
பின்னர் பேசும் ஷிவின், “நீங்கள் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறீர்கள்.. நீங்கள் மட்டும் கேமில் இருந்தால் நான் உங்களை பறக்கவிட்டு இருப்பேன்..” என்று கூறுகிறார். அதற்கும் பதில் பேசும் மகேஸ்வரி, “பறக்கவிட்டு இருப்பீர்களா..? நான் பயந்து விட்டேன்” என்று கூறுகிறார். அதற்கு ஷிவினும் “ஆம்.. நீங்கள் பயந்து விட்டீர்கள் என்பது உங்கள் பேச்சிலேயே தெரிகிறது. அதனால்தான் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறீர்கள்.. இதில் இருந்தே தெளிவாக தெரிகிறது நீங்கள் பயந்து விட்டீர்கள்என்பதுதான் உண்மை!” என்று பேசுகிறார். இவர்களின் வாக்குவாதம் பிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் வாக்குவாதமாக மாறியது.