நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த டாக்டர் திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. அனிருத் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் ஏற்கனவே செல்லம்மா செல்லம்மா உள்ளிட்ட சில பாடல்கள் ஹிட் அடித்தன.
இதனைத் தொடர்ந்து டாக்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ், சில தேதிகளில் லாக் செய்யப்பட்டு மீண்டும் கொரோனா காரணமாக அதன் ரிலீஸ் தேதி என்பது தள்ளி போனது. இந்த நிலையில் டாக்டர் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருந்தது.
இதனிடையே டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன், வினய், யோகிபாபு மற்றும் பலர் நடித்து இருப்பதை காணமுடிகிறது. இதன் மூலம், சிவகார்த்திகேயன் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு பரபரப்பான ஆக்ஷன் கதைக் களத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வருகிறது. இதில் வினய் வில்லனாக தன்னுடைய மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இந்த திரைப்படத்தில் இவர்களுடன் அர்ச்சனா, அருண் அலெக்ஸாண்டர், இளவரசு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
கதைப்படி, குடும்பம் போல நடித்து பெண்களை கடத்தும் ஒரு குழுவினரை சிவகார்த்திகேயன் வழிநடத்துகிறார். ஆக்ஷன், டார்க் ஹ்யூமர் நிறைந்த இந்த திரைப்படத்தில், நடிகர் வினய் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் உடல் உறுப்புகள் திருட்டு உள்ளிட்டவற்றை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை திரைப்படம் இதேபோல ஒரு கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அப்படத்தில் இருந்து மாறுபட்டு, வேறொரு பரிமாணத்தில் டாக்டர் திரைப்படம் இருக்கும் என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிகிறது. கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் தயாரித்த இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
தற்போது சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்திலும் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தளபதி விஜய்யின் 65வது படமான பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டாக்டர் திரைப் படத்தின் ட்ரெய்லரில் இறுதியில் வரும் ‘பச கச’ என்கிற கர்நாடக சங்கீத பாணியிலான ‘Soul of Doctor’ என்கிற தீம் மியூசிக் வைரலாகி வருகிறது.
இது ஒரு பின்னணி இசைதான் என்றாலும் கூட தற்போது பலரும் இதை ரிங்டோனாக வைத்திருக்க விரும்புகின்றனர். இணையதவாசிகள் மத்தியில் திடீரென இந்த தீம் மியூசிக் ட்ரெண்டாகி வருகிறது.
டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.