ஜி.வி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள '4ஜி' பட இயக்குநர் ஏ.வி. அருண் பிரசாத் என்கிற வெங்கட் பக்கர் நேற்று (15/05/2020) காலை கோயம்புத்தூரில் சாலை விபத்து ஒன்றில் மரணமடைந்தார். முதல் படம் வெளியாவதற்கு முன்பே அவர் மரணமடைந்த சம்பவம் பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குநர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்... அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்..'' என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஏ.வி. அருண் பிரசாத் பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ''என்னுடைய முன்னாள் உதவியாளரும், இளம் இயக்குநருமான அருணின் மறைவு செய்தியைக் கேட்டு மனம் உடைந்தது. நீ எப்பொழுதும் இனிமையான, நேர்மறையான, கடினமாக உழைக்கக்கூடியவன். உனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 'இன்று நேற்று நாளை' மற்றும் 'அயலான்' பட இயக்குநர் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''நண்பா என்னை ஹீரோ மாதிரி எடுடான்னு சொன்னியே.. உன்னை அவ்ளோ ரசிச்சு நான் எடுத்த இந்த போட்டோவை உனக்கு அஞ்சலி போட்டோவா போட வெச்சிட்டியேடா நண்பா !
டெய்லி எவ்ளோ பேசியிருப்போம். எத்தனை ஆசைகளை சொன்ன... உன்னோட கனவுகளெல்லாம் காத்துல போயிடுச்சே அய்யோ... என் வெற்றிய உன்னோட வெற்றியா கொண்டாடுற உன் இடத்தை யார்டா நிரப்புவா. உங்கம்மாவ என்ன சொல்லி தேத்துறது. போடா டேய்'' என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.