பிரபல இயக்குநர் பாலா 'அர்ஜூன் ரெட்டி'யின் தமிழ் ரீமேக்கை 'வர்மா' என்ற பெயரில் இயக்கினார். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மாற்றுக்கருத்து காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது. இதனையடுத்து இயக்குநர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இதனையடுத்து தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்தார். இந்த படம் மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஜோசஃப்' படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை பாலா, தனது பி ஸ்டுடியோஸ் சார்பாக தயாரித்து வருகிறார். இந்த படத்துக்காக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உடல் எடை அதிகரித்திருந்தார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அது செம வைரலானது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வருகிற 23 ஆம் தேதி புதன் கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.