சென்னை : சென்னையில் நேற்று நடந்த RRR படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தமிழ் நடிகர்களான சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் கலந்துகொண்டு மேடையில் கலகலப்பாக பேசினார்கள்.
சிவகார்த்திகேயன் என்று சொன்னாலே சிரிப்புக்கும், கலகலப்பும் பஞ்சமே இருக்காது. ஒரு தொகுப்பாளராக இருந்தது முதல் ஹீரோவாக பல வெற்றிகளை கொடுத்த பிறகும், அதே கலகலப்பு அவரிடத்தில் இருக்கிறது.
அவரது எளிமையையும், அவர் மேடைக்கு அருகில் அமர்ந்து செய்த செய்கையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று அவர் பேசிய வார்த்தைகள் அவர் செய்த செயல்கள் என்று அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது.
மேடை பேச்சு
RRR படம் குறித்து சிவகார்த்திகேயன் மேடையில் பேசும்போது, " நான் ராஜமௌலி சாரோட மிகப்பெரிய ரசிகன், மகதீரா படம் பார்த்ததிலிருந்து, அவருடைய பெரிய ஃபேன் ஆக மாறி விட்டேன். அதன் பிறகு "நான் ஈ" படம் பார்த்தேன். ஒரு ஈ வைத்துக்கொண்டு ஒரு சூப்பர் ஹிட் படம் எடுக்க முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன். அப்பொழுதுதான் நான் சினிமா இண்டஸ்ட்ரியில் நுழைந்த நேரம்.
ஈ-யை வைத்தெல்லாம் ஒரு படம் ஹிட் கொடுக்கிறார்கள் கண்டிப்பாக நம்மையும் சினிமா உலகம் ஏற்றுக்கொள்ளும் என்று அப்பொழுதுதான் எனக்கு தைரியம் வந்தது. அதன்பிறகு ஒரு பயமும் வந்தது, ஈ-யை வைத்து படம் வெற்றி கொடுக்கும் பொழுது, இவங்க எல்லாம் எதற்கு என்று நினைத்து விடுவார்களோ என்று நான் மிகவும் பயந்தேன்.
ரசிக்க தொடங்கினேன்
நான் ஈ படத்திற்கு பிறகு தான், அவரது ஒவ்வொரு படங்களையும் நான் ரசிக்க தொடங்கினேன். ஒரு படம் ஹிட் கொடுத்தாலே, கெத்தாக பேசும் பலருக்கு மத்தியில், இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து விட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்க தொடங்கிவிடுகிறார். அது ஒரு பெரிய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக உள்ளது என்று சிவகார்த்திகேயன் கூறினார். சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தங்களுடைய நிஜ வாழ்க்கையிலும் ஜெயிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்று புகழ்ந்தார்.
நீண்ட நாள் ஆசை
நீண்ட நாட்களாகவே உங்களைப் பார்க்க வேண்டும் என்று நான் ஆவலாக இருந்தேன். ஆனால் இன்று பார்த்துவிட்டேன். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இரண்டு சிங்கங்கள், இரண்டு புலிகள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவர்களை நான் தூரத்திலிருந்து தான் பார்த்து ரசித்து உள்ளேன். கடந்த முறை விருது வழங்கும் விழாவிற்கு வந்த போது, என்னுடைய படத்தை அவர்கள் குடும்பத்தினர் பார்ப்பார்கள் என்று கூறும்போது சந்தோஷமாகவும், இன்னும் நிறைய முயற்சி செய்து நன்றாக நடிக்க வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தியது. பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் என்று அவர்களை சிவகார்த்திகேயன் பாராட்டினார்.
ஹிட் கொடுக்கும்
இந்த படம் கண்டிப்பாக ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைக்கும் படமாக இருக்க போகிறது. இதற்கு முன்னால் நடந்த அனைத்து சாதனைகளையும் இந்த படம் முறியடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்றார். ட்ரெய்லரை பார்க்கும் போதே பிரமிப்பாக இருந்தது. படம் எப்படி இருக்குமோ என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது. படம் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். கண்டிப்பாக இந்த படத்தை நான் முதல் நாள் முதல் ஷோவில் பார்க்க போகிறேன். 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கப் போகின்றது அதுமட்டுமில்லாமல், அஜித்தின் வலிமையும் வரப்போகிறது. இந்த படத்தை எல்லாம் மக்கள் திரையரங்கில் வந்து பார்த்தால், அதன் பிறகு படம் பார்க்க வரும் மக்கள் கண்டிப்பாக எங்கள் படங்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்.
எடுத்து சொன்ன சிவா
இந்த நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் நன்றி கூறிய பாவனா மற்றும் விஜய். டிரம்ஸ் வாசிப்பவர் பெயரை சொல்லாமல் விட்டு விட்டனர். அதை கவனித்த சிவகார்த்திகேயன், கீழே அமர்ந்தபடி கைகளிலேயே அவரது பெயரை சொல்லும் படி எடுத்துரைத்தார். அதை பார்த்த தொகுப்பாளர்கள் டிரம்ஸ் வாசிப்பவரை பாராட்டி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். சிவகார்த்திகேயன் செய்த இந்தச் செயல் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. "இந்த நல்ல மனசு தான் சார் கடவுள்" என்று அனைவரும் சிவகார்த்திகேயனை கொண்டாடி வருகின்றனர்.