‘கனா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் கடந்த ஜூன்,14ம் தேதி வெளியான இப்படத்தின் மூலம் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக அறிமுகமானார். ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், ராம் நிஷாந்த், வி.ஜே சித்து, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு ஷபிர் இசையமைத்திருந்தார், யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
காமெடி கலந்த அரசியல் திரைப்படமாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் படத்தின் வெற்ரிக்கான காரணம் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.
‘இப்படத்தை ஸ்பூஃப் அதிகம் இல்லாமல் படத்தை படமா பண்ண வேண்டும் என முடிவு செய்திருந்தோம். அது நடந்தது. க்ளைமேக்ஸ் தான் இதன் வெற்றிக்கு காரணம். என்னுடைய நண்பர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது தான் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் புதிய கலைஞர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் இதனை தொடங்கினோம். இப்படத்தை பார்த்துவிட்டு உலகக்கோப்பை போட்டிக்கு செல்ல விமான நிலையம் சென்றபோது, அரசு பணியாளர் பெண் ஒருவர் என்னிடம் வந்து படம் நன்றாக இருந்ததாக கூறினார் அங்கேயே தெரிந்துவிட்டது படம் வெற்றி என்று’.
‘விக்னேஷ்காந்தின் குடும்பத்தினரை சந்தித்தேன், அப்போது இயக்குநர் கார்த்திக்கின் கைகளை பிடித்துக் கொண்டு அவர் கண்ணீர் வடித்தார். அப்போது என் அப்பாவை அந்த இடத்தில் உணர்ந்தேன். எனது வெற்றியை பார்த்து அவர்அந்த சந்தோஷத்தோட உலகக்கோப்பை மேட்ச் பார்க்கச் சென்றேன்’ என்றார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘அருவி’ பட இயக்குநர் அருண் பிரபு இயக்கவிருக்கும் ‘வாழ்’ திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.