சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸாக பிரின்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது.
டாக்டர், டான் படங்களை அடுத்து…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து டாக்டர் மற்றும் டான் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். இதையடுத்து இயக்குனர் அனுதீப் கே வி யின் தெலுங்கு-தமிழ் இருமொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் நாராயண் தாஸ் நரங், சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சோனாலி நரங் படத்தை வழங்குகிறார். எஸ் தமன் இசையமைக்க, அருண் விஸ்வா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
படப்பிடிப்பு…
இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் நடந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தை விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். கோபுரம் பிலிம்ஸ் இந்த படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்…
இந்நிலையில் ஜூன் 9 ஆம் தேதி படத்தின் டைட்டிலை அறிவித்ததோடு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். PRINCE என்பது படத்திற்கான தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் சிவகார்த்திகேயன் கையில் ஒரு உலக உருண்டையுடன் வெள்ளை நிற சட்டை அணிந்து காட்சியளித்தார். பின்புலத்தில் உள்ள கைகளில் உலக நாட்டின் தேசியக்கொடி வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன, மேலும் உலக வரைபடத்தையும் பின்புலத்தில் காணலாம் மற்றும் அமைதியின் சின்னமான புறாவையும் பின்னணியில் காணலாம். தலைப்போடு 'யாதும் ஊரே' என்ற பிரபல சங்க கால பாடலின் வரி இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் வெளியானவுடன் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சுற்றுலா கைடாக பணியாற்றுகிறார் என்று சொல்லப்படுகிறது.
அடுத்த அப்டேட்…
இந்நிலையில் படத்தைப் பற்றிய அடுத்த அப்டேட் பற்றி தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் ட்வீட் செய்துள்ளது. அதில் பிரின்ஸ் படத்தின் அடுத்த அப்டேட் நாளை (ஜூன் 21) ஆம் தேதி காலை 10.45 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.