கஜா பாதிப்பையும் தாண்டி +2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு சிவகார்த்திகேயன் கல்வி உதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்டா பகுதிகளை சூறையாடிய கஜா புயலில் ஏராளமானோர் விவசாய நிலம், வீடுகளை இழந்தனர். அப்பகுதி மக்கள் கஜா புயலின் பாதிப்பில் இருந்து இன்னும் சரியாக மீளாத சூழலிலும், மின்சாரம் இல்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வசித்து வரும் மாணவி சஹானா நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா, தான் மருத்துவம் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அரசுப்பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
அவரது ட்வீட்டை பார்த்த பலரும் மாணவி சஹானாவிற்கு நிதியுதவி வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ட்வீட்டை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், இன்ஸ்பைரிங்காக இருப்பதாக ட்வீட் செய்ததுடன், மாணவியின் கல்விக்கு தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
ஏற்கனவே விவசாயி நெல் ஜெயராமனின் மகனது கல்விச் செலவுகளை ஏற்றுக் கொண்ட சிவகார்த்திகேயன், தற்போது கஜா புயலின் பாதிப்புக்கு இடையிலும் மன உறுதியோடு படித்து அதிக மதிப்பெண் பெற்றுள்ள கூலி விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி சஹானாவிற்கு உதவிக் கரம் நீட்டியுள்ளார்.