கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது டாக்டர் திரைப்படம்.
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி, திரையரங்கில் வெளியாகவுள்ளது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷனையொட்டி பிஹைண்வுட்ஸ் டிவி - யூடியூப் சேனலில் Kiss Me Hug Me Slap Me நிகழ்ச்சியில் விஜே நிக்கியுடன் ஜாலியான ஃபன் பேட்டியில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.
முன்னதாக இந்த பேட்டி நிகழ்ச்சிக்காக, வருகை தந்த சிவகார்த்திகேயன் காரிலிருந்து இறங்கிய உடனேயே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூபா என்கிற ரசிகர் வரைந்த ஒரு ஓவியத்தை சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.
அதில் சிவகார்த்திகேயனின் தந்தை சிவகார்த்திகேயன் குழந்தையை கையில் ஏந்துவதாக வரையப்பட்டிருந்தது. சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்கிற பெண் குழந்தை இருக்கும் நிலையில், அண்மையில் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்தபோது தந்தையே தன் மகனாக பிறந்து இருப்பதாக எண்ணுவதாக சிவகார்த்திகேயன் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதில் ஒரு பக்கம் தன்னுடைய தந்தையின் புகைப்படத்தையும் இன்னொரு பக்கம் குழந்தையின் கைவிரல்களை சிவகார்த்திகேயன் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதை வைத்துதான் சிவகார்த்திகேயனின் குழந்தையை அவருடைய தந்தை கையில் ஏந்துவது போன்ற ஓவியத்தை இந்த ரசிகர் வரைந்திருக்கிறார் என்று சிவகார்த்திகேயனிடம் தெரிவிக்கப்பட்டது.
இதை பார்த்துவிட்டு நெகிழ்ந்த சிவகார்த்திகேயன், “எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதை நான் வீட்டில் வைத்துக் கொள்ளப் போகிறேன்!” என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
தொடர்ந்து டாக்டர் திரைப்படம் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சனும் தானும் தொடக்க காலத்தில், டிவி சேனலில் பணியாற்றியதாகவும், தொடர்ந்து திரைப்படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது அவருடைய இயக்கத்தில் தான் தயாரித்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசியவர், “இந்த திரைப்படம் கண்டிப்பாக புதியதாக இருக்கும். ஆடியன்ஸுக்கு மிகவும் பிடிக்கும். டிரைலரின் முடிவில் தற்போது அமைந்திருக்கும் அந்த பிஜிஎம் இசையை போல டாக்டர் திரைப்படம் இன்னும் புதுமையானதாக, மக்களின் வரவேற்பை பெறுவதாக இருக்கும். இந்த டிரைலருக்கு கிடைத்த வரவேற்பும், ரெஸ்பான்ஸூம் படத்துக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் இப்போது இருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே தன்னுடைய ஆண் குழந்தை பிறந்த சமயத்தில் தான் பெரும்பாலும் ஆர்த்தியுடன் இருந்ததாகவும், இப்போது மகன் ஊருக்குச் சென்று உறவினர்களை பார்த்து வருவதற்காக குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.
குகன் தாஸ் என்கிற பெயருடைய சிவகார்த்திகேயனின் மகன் பிறக்கும் பொழுது தன் மனைவி ஆர்த்தி பட்ட வலிகளை பார்த்தபோது, பெண்மை மற்றும் தாய்மை மீது தனக்கு இன்னும் அதிக மதிப்பு வந்ததாகவும், அந்த வலி இப்போதுதான் தெரிகிறது என்றும் குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், அதன்பிறகு ஆர்த்தி மீது இன்னும் ரெஸ்பெக்ட் அதிகமாகி இருக்கிறது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் டாக்டர் திரைப்படம், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தயாரிப்பாளராக தன் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சிவகார்த்திகேயன் ஜாலியாக இந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். விஜே நிக்கிக்கு சில அதிர வைக்கும் டாஸ்குகளையும் கொடுத்து சிவகார்த்திகேயன் ஃபன் பண்ணியிருக்கிறார். இந்த முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.