இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’.
இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி நேரடியாக திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் நடிகர் வினய் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக தளபதி 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், ‘டாக்டர்’ திரைப்படம் குறித்து பல்வேறு விஷயங்களை, பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார்.
டாக்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவரும் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவருமான நடிகர் வினய், இந்த பேட்டியில் நெல்சன் திலீப்குமார் பற்றி பேசும்போது, “நான் யாருடனும் அவ்வளவு எளிமையாக நெருக்கமாக மாட்டேன். நெல்சன் திலீப்குமாரை பார்த்தவுடன் இந்த திரைப்படம் நன்றாக வரப்போகிறது என்று முடிவு செய்து விட்டேன். அவர் படத்தில் நடிக்க தயாராகிவிட்டேன். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு நான் நடிக்க வந்தேன். படப்பிடிப்பில் சற்றே படபடப்பாக இருந்தேன். அந்த காட்சிகளில் நடிக்கும்போது, எனக்கு நன்றாக ஊக்கம் கொடுத்து நெல்சன் என்னிடமிருந்து அவுட்புட் வாங்கி நடிக்க வைத்தார்.
இந்த குழுவை நான் ஆச்சரியமாக பார்க்கிறேன். ஒரு சீரியஸான காட்சியை எடுத்து முடித்துவிட்டு கட் சொன்னவுடன், நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் அந்த இடத்தையே ஜாலியாக மாற்றிவிடுவார்கள். அவர்கள் வேலை செய்யும் விதமே வித்தியாசமாக இருக்கிறது. நானே ஒருமுறை அவரிடம் கேட்டேன், இப்போதே இப்படி வேலை செய்கிறீர்கள் என்றால், தொலைக்காட்சி பிரிவில் வேலை செய்யும் பொழுது இன்னும் எந்த அளவுக்கு ஜாலியாக இருந்திருப்பீர்கள்? என்று கேட்டேன். அந்த அளவுக்கு இந்த குழுவினருடன் பணிபுரிந்தது மிகவும் சிறப்பாக இருந்தது!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில், தனது கதாபாத்திரம் மற்றும் திரைப்படத்தில் வரும் மெய்சிலிர்க்கும் காட்சி அனுபவம் குறித்து பேசிய வினய், “இந்த படத்தில் என் டப்பிங் பணிகளை முடித்த பிறகு, இந்த படத்தை பார்த்தேன். நிச்சயமாக நெல்சன் இந்த திரைப்படத்தை செதுக்கி இருக்கிறார் என்பதை பல இடங்களில் உணரமுடியும். கண்டிப்பாக இது ஒரு நல்ல வரவேற்பு பெறக்கூடிய ஒரு படமாக அமையும்!” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே நெல்சன் திலீப்குமார், தளபதி65 படமான பீஸ்ட் படத்தை விஜய்யின் நடிப்பில் இயக்கி வர, நெல்சன் மற்றும் அந்த படக்குழுவினருடன் பணிபுரியவேண்டும் என்பதற்காகவே, பீஸ்ட் படத்தில் சான்ஸ் கேட்டதாகவும் வினய் ஜாலியாக குறிப்பிடுகிறார்.
மேலும், “வில்லன் நடிகரோ.. ஹீரோ நடிகரோ.. நாம் நடிப்பதை விரும்பி செய்ய வேண்டும். அவ்வளவுதான்” என்று குறிப்பிட்ட வினய், “நம் உழைப்பு மட்டும் நம்மளை முன்னேற்றி விடாது.. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.. நெல்சன் இந்த திரைப்படத்தை அருமையாக இயக்கியிருக்கிறார்.. இப்படி நம்முடன் இணைந்து பணிபுரிபவர்களின் கருணைதான் நம் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போடுகிறது” என்று பேசியுள்ளார்.
அத்துடன் தொடக்ககாலத்தில், விஸ்கி கம்பெனி மற்றும் வங்கிகளில் எல்லாம், தான் பணி புரிந்ததாகவும், ஆனால் ஒரு அறைக்குள் அமர்ந்து வேலை செய்யும் முறை மற்றவர்களுக்கு எப்படியோ தனக்கு உடன்பாடு இல்லாததால், அதில் இருந்து வெளியேறி விட்டதாகவும், பிறகு சினிமா என்று வந்தபோது சினிமாவை விரும்பி லவ் பண்ணி நடிக்க தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
வினய் பேசியிருக்கும் பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் உருக்கமான விஷயங்களை இணைப்பில் இருக்கும் வீடியோவை முழுமையாக காணலாம்”