தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் சூர்யா பெற்றார்.
மேலும் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் சிறப்பு கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா.
தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். வசனங்களை மதன் கார்க்கி எழுதி உள்ளார்.
இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் இந்த அறிவிப்பு தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு மலைகளுக்கு இடையே குதிரை மீது அமர்ந்து போர் வீரர் தாவுவது போல் போஸ்டர் வெளியாகி உள்ளது. வேட்டை நாய் ஒன்றும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.