80களில் இருந்து தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடன இயக்குநராக திகழ்ந்து வந்த சிவசங்கர் மாஸ்டர் கொரோனா காரணமாக 2021, நவம்பர் 28-ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
தனுஷின் மன்மத ராசா பாடல், அஜீத்தின் வரலாறு திரைப்படம் என பல்வேறு முன்னணி நடிகர்களின் முக்கிய படங்களில் பணிபுரிந்த சிவசங்கர் மாஸ்டர், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம், இன்று நேற்று நாளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் மற்றும் வரவிருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பிலான ‘அயலான்’ படத்தின் இயக்குநர் ரவிகுமார், “நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் அவர்கள் காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், “இன்று நேற்று நாளை திரைப்படத்தில் அந்தகால நகைக்கடை காட்சி இவரது தோற்றத்தினாலும், நடிப்பினாலும்தான் நம்பும்படியாக இருந்தது. ‘சமூகம் பெரிய இடம்போல’ என்ற வசனம் மீம் கன்டென்டாக மாறி இன்றளவும் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.
அடிக்கடி தொலைபேசியில் அழைப்பார். அடுத்த பாகத்தில் நான் இடம்பெறுவேன் தம்பி என்று உரிமையோடு பேசுவார். மனதார வாழ்த்துவார். இரக்கமற்ற கொரோனாவின் கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நல்ல மனிதர்களை இழந்துகொண்டே இருக்கிறோம்.” என்று இயக்குநர் ரவிகுமார் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.