சாத்தான்குளம் சம்பவம் குறித்து பாடகி சுசித்ரா தனது கருத்தை ட்விட்டரில் முன்வைத்துள்ளார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபெனிக்ஸ் காவல்துறை அடக்குமுறையால் உயிரிழந்திருப்பது நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து இச்சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்தன. தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாடகி சுசித்ரா இச்சம்பவம் குறித்து ஆரம்பம் முதலே தனது கண்டனங்களை பதிவிட்டு வருவதுடன், இதை மேலும் பலருக்கு கொண்டு சேர்க்கும் வேலைகளை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு, தன்னிடம் 2 கோடி வரையில் பேரம் பேசப்பட்டதாகவும் சுசித்ரா தெரிவித்திருந்தார்.
இதனிடையே தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''சாத்தான்குளம் சம்பவத்தை பெரிதாக கவனிக்காமலும், வெறும் முதலைக்கண்ணீர் மட்டுமே வடிக்கும் கோலிவுட், ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் மரணத்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்கினால், நான் தமிழ்நாட்டை விட்டே செல்வதே சரியாக இருக்கும். கேரளா அல்லது கோவாவுக்கு சென்றுவிடலாம்'' என பதிவிட்டுள்ளார்.