பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா வைரஸ் பரவியதன் காரணம் இவர்தான் என பரவிய வாட்சப் செய்தி குறித்து பாடகி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கடந்த ஆகஸ்ட்-14 ஆம் தேதி, எஸ்.பி.பியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது. இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்காக, நேற்று பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும், வீடுகளில் கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா வைரஸ் பரவ காரணம் இவர்தான் என தெலுங்கு சூப்பர் சிங்கர் பாடகி மாளவிகாவை குறிப்பிட்டு வாட்சப் செய்திகள் பரவின. இதையடுத்து பாடகி மாளவிகா இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ''ஊரடங்கு போடப்பட்டது முதலே நாங்கள் சமூக விலகலை கடைபிடித்து வருகிறோம். எங்கள் வீட்டில் இரண்டு வயது குழந்தை இருக்கிறது. நாங்கள் பாதுகாப்பாகவே இருந்து வந்தோம். ஆனால் அன்றைய ஷோவுக்கு வந்த எஸ்.பி.பி சார் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் வந்த விஷயம் தெரிந்த பின்னரே, நானும் டெஸ்ட் எடுத்து பார்த்தேன். எனக்கும் பாசிட்டீவ் என வந்தது, எனது அப்பா, அம்மா மற்றும் குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனது அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் கடினமான காலத்தில் இருக்கிறோம். தயவு செய்து பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள். மேலும் சைபர் க்ரைமில் இதுகுறித்து புகாரளித்துள்ளேன். அதனால் இந்த தவறான செய்தியை வாட்சப் மூலம் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.