கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இந்த நாட்களில் அத்தியாவசியப் பொருட்களான மளிகை, மருந்துகடைகள், மருத்துவமனை உள்ளிட்டவை தவிர மற்றவை இயங்காது.
அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் பலரும் மக்களுக்கு விழிப்புணவர்வு ஏற்படுத்தும் பதிவை எழுதி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பிரபலங்கள் தங்களுக்கு விருப்பமானவை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு எழுதி, மற்றவர்களையும் இதுகுறித்து தெரிவிக்குமாறு பிரபலங்கள் ட்விட்டர் பக்கங்களை குறிப்பிட்டு வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குநர் சிஎஸ் அமுதன் உள்ளிட்டோர் பதிவுகள் ரசிகர்களிடையே வரவரேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு விருப்பமானவை குறித்து தெரிவித்துள்ளார். அதில் ''தனக்கு விருப்பமான நிறம் மஞ்சள், தனக்கு விருப்பமான நடிகர் விஜய் சேதுபதி, தனக்கு விருப்பமான டிரிங்க் ஃபில்டர் காஃபி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கணவரும் இயக்குநருமான ராகுல் ரவிந்திரன், நடிகை சமந்தா, வெண்ணிலா கிஷோர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு இந்த சேலஞ்சிற்கு அழைத்துள்ளார்.
அதற்கு பிரபல நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா, டிரம்ப் இந்த சேலஞ்சில் பங்கேற்பதை பார்க்க வேண்டும். இந்த அளவுக்கு எந்த சந்தர்ப்பமும் அவருக்கு சவலாக இருந்திருக்காது'' என்று பதிலளித்துள்ளார்.