International Film Festival, Chennai: 19வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய ‘திக்கற்ற பார்வதி’ திரைப்படம் வரும் 2022, ஜனவரி 1-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை PVR Multiplex-ல் (முன்னாள் சத்யம் தியேட்டர்) 6 Degrees ஸ்கிரீனில் திரையிடப்படுகிறது.
"திக்கற்ற பார்வதி''
திரு.ராஜாஜி அவர்களின் பிரபல நாவலான "திக்கற்ற பார்வதி'' கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை, ராஜாஜியின் ஒப்புதலுடன் ஃபிலிம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் ஸ்பான்ஸர்ஷிப்பில் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தமிழில் தம்முடைய முதல் படமாக இயக்கினார். இப்படம் 1974-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி ரிலீஸ் ஆனது.
முதல் நியோ-ரியலஸ்டிக் படம்
ராஜாஜியின் பிறப்பிடமான தொரப்பள்ளியில் படமாக்கப்பட்டு, 1975- ம் ஆண்டின் சிறந்த தமிழ்த்திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதுப் பெற்ற இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமி, பூர்ணம் விஸ்வநாதன், ஒய்.ஜி.மகேந்திரன், டைப்பிஸ்ட் கோபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘திக்கற்ற பார்வதி’ படம் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையிலேயே முதல் நியோ-ரியலஸ்டிக் (neorealistic film) வகைத் திரைப்படமாக அமைந்தது.
இசை, பாடல், வசனம்
இப்படத்திற்காக கதையிலேயே ராஜாஜி ஒரு பாடலை எழுதியிருந்ததுடன், இன்னொரு பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதினார். பிரபல வீணை வித்வான் சிட்டி பாபு முதன்முறையாக சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுடன் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக இணைந்தார். வாணி ஜெயராமின் குரலில் ஆகாயம் மழை பொழிஞ்சா என்கிற பாடல் கவனம் பெற்றது. இப்படத்திற்கு காரைக்குடி நாராயணன் ஒளிப்பதிவை கையாண்டதுடன் வசனமும் எழுதினார்.
நிஜ நீதிமன்றத்தில் படப்பிடிப்பு
இப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சிகள் அனைத்தும் உண்மையிலேயே நிஜ வழக்கறிஞர்கள் பங்குபெற, ஒசூரில் உள்ள நிஜ நீதிமன்றத்தில் படமாக்கப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் திரு. M. G.ராமச்சந்திரனின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழான தமிழக அரசு, இப்படத்தின் ஃபிலிம் நெகடிவை, 16 mm காப்பிகளாக மாற்றி பிரச்சாரம் செய்வதற்காக எடுத்துக்கொண்டது.
ஒரு single print கூட இல்லை, டேமேஜ் ஆகிவிட்டது!
இந்நிலையில் இப்படம் பற்றி இப்போது பேசியுள்ள இப்படத்தின் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், “இப்படம் வெளியான சில வருடங்களில் இப்படாத்தின் ‘ஃபிலிம் நெகடிவ்’ முழுமையாக டேமேஜ் ஆகி இருந்ததை அறிந்தேன். ஒரு single print கூட இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக புனே National Film Archives-இடத்தில் ஒரு print இருந்தது. அவர்கள் வழங்கிய திக்கற்ற பார்வதியின் டிஜிட்டல் காப்பி இப்போது எனது கையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சென்னை சர்வதேச திரைப்பட விழா- PVR Multiplex-ல் திரையிடப்படுகிறது
இந்நிலையில் 19வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரும் 2022, ஜனவரி 1-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை PVR Multiplex-ல் (முன்னாள் சத்யம் தியேட்டர்) 6 Degrees ஸ்கிரீனில் திரையிடப்படவுள்ள ‘திக்கற்ற பார்வதி’ திரைப்படம், வெளியான அன்றைய காலக்கட்டத்தில் தந்த அதே புதுமலர்ச்சியை இப்போதும் பார்வையாளருக்கு வழங்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்!” என தெரிவித்துள்ளார்.
இதேபோல், சினிமா தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து வெளியான சுமார் 500 கிளாசிக் படங்களை இந்திய அரசாங்கம், டிஜிட்டலைஸ் செய்யவுள்ளது. அதில் ஒரு படமாக ‘திக்கற்ற பார்வதி’ தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.