சிலம்பரசன் தொடர்பான பிரச்சனை குறித்து அவரது தாயார் உஷா ராஜேந்தர் பத்திரிகையாளர்களிடையே பேசியுள்ளார்.
அதில், “சிலம்பரசன் - மைக்கேல் ராயப்பன் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் எங்களை அழைத்து பஞ்சாயத்து செய்கிறார்கள். ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் முகாந்திரமும் இல்லை. எனினும் பிரச்சினையை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் சென்று வந்தோம். ஆனால் இந்த முறை மீண்டும் பிரச்சினையை தொடங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அழைத்திருக்கிறார்கள். சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் 2-வது கட்ட படபிடிப்பு நடக்கப்போகிறது. இதனை நிறுத்துவதற்கான முயற்சியில் தான் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
சிம்பு தொடர்பான 4 பிரச்சனைகளை பற்றிய நிலவரம் இது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிம்புவுடனான பிரச்சினையை முடித்துக் கொண்டதாக, தயாரிப்பாளர் சிவசங்கர் தம் தரப்பிலிருந்து கடிதம் கொடுத்துவிட்டார். இதனால் இத்துடன் ஒரு பிரச்சினை முடிந்து விட்டது.
Also Read: தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் அறிவிப்பு.. புதிய ஊரடங்கில் தளர்வுகளுடன் அனுமதி!
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனர் லிங்குசாமிக்கும் சிம்புவுக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்தப்படி சிலம்பரசனின் கால்ஷீட் பல மாதங்களுக்கு வீணடிக்கப் பட்டதால், ஒப்பந்தத் தொகை திருப்பித் தரப்பட வேண்டியது இல்லை. அதற்கு வட்டியும் இல்லை. எனினும் மனிதாபிமான அடிப்படையில் வட்டி இல்லாத அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம் இரண்டாவது பிரச்சினை முடிந்தது.
மூன்றாவதாக, சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டி.ராஜேந்திரன் அவர்களுக்கும் பி.டி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் பி.டி செல்வகுமார் என்பவருக்கும், ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் சம்பந்தமான ஒப்பந்தப்படி பி.டி.செல்வகுமார் எந்த ஒரு மூன்றாவது நபருக்கு இந்த உரிமையை மாற்றி தரக்கூடாது என்று சரத்து உள்ளது. எனவே இது தொடர்பான மேற்படி பிரச்சினைகளுக்கு அவர் நீதிமன்றத்தை நாட வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட நபருடன் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர சிம்புவுடன் இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை. இதனைத் தொடர்ந்து பி.டி.செல்வகுமார் சிம்புவுடன் நேரில் சந்தித்து இந்த பிரச்சினையை பேசி முடித்துக் கொண்டதாக கூறிவிட்டார். மூன்றாவது பிரச்சினை முடிந்தது.
நான்காவது பிரச்சனையாக, கடந்த காலத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் அதே காலத்தில் நடிகர் சங்க செயலாளராகவும் இருந்த நடிகர் விஷால் ஒப்புதலுடன் இந்த பஞ்சாயத்து நடக்கிறது. சிலம்பரசனை பழிவாங்கும் நோக்கத்தில் இதெல்லாம் நடப்பதாக தோன்றுகிறது. சிலம்பரசனின் படங்கள் வெளியாவதிலும், புதிய படங்களில் அவர் நடிப்பதிலும் பிரச்சினை செய்து வருவதாக அவர் மீது நடிகர் சங்கத்தின் மீதும், தயாரிப்பாளர் சங்கத்தின் மீதும், மைக்கேல் ராயப்பன் மீதும் நடிகர் சிலம்பரசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
Also Read:‘அண்ணாத்த’ பட ஷூட் எங்க நடக்குது?.. Spot-ல இருந்து முக்கிய நடிகர் பகிர்ந்த Viral Photo!
நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை தொடர்ந்து, தமிழக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி மைக்கேல் ராயப்பன், இந்த பிரச்சினையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எந்தவிதமான பஞ்சாயத்தும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். எனவே மைக்கேல் ராயப்பன் பிரச்சினையை கோர்ட்டில் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு முரண்பட்டு நாங்கள் எந்தவித பஞ்சாயத்திலும் செய்ய விரும்பவில்லை.
ஆனால் தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் விவகாரம் தொடர்பாக எங்களை கட்டப்பஞ்சாயத்துக்கு அழைக்கிறார்கள். ஒருவர் கோர்ட்டுக்கு போன போது இன்னொரு தரப்பினரும் கோர்ட்டுக்குப் போவதுதானே நியாயம்? எங்களை சங்கத்திற்கு பஞ்சாயத்து பண்ண அழைத்து பணப்பட்டுவாடா செய்ய சொல்லி மிரட்டுகிறார்கள்.
சிம்புவோ, “மீண்டும் நான் மைக்கேல் ராயப்பனை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை, அவருக்கு இன்னொரு படம் நான் இலவசமாக நடித்து தருவதாக வாக்கு கொடுக்கவும் இல்லை” என கூறிவிட்டார். யாரும் உலகத்தில் அப்படி இலவசமாக அப்படி செய்ய மாட்டார்கள். AAA திரைப்படத்தில் முதல் ஷாட்டில் இருந்து கடைசி ஷாட் வரை சிம்பு நடித்து இருப்பார். அந்த படத்தில் அவருக்கு பதில் டூப் யாரும் நடிக்கவில்லை.
வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் இரண்டாவது கட்டப் படப்பிடிப்புக்கு போகும்போது தடுத்து நிறுத்தினால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சிலம்பரசன் நன்றாக வளர்ந்து வருவதுதான் பிரச்சினை என்று நினைக்கிறேன். அவர் இன்னும் மேலே மேலே நன்றாக வருவார் எல்லாப் பிரச்சினையும் அவர் தீர்ப்பார்.” என்று உஷா டி.ராஜேந்தர் இந்த தெரிவித்திருக்கிறார்.