வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் முதல் முறையாக இணைந்துள்ளார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் குறித்த விழாவில் பேசிய நடிகர் சிம்பு, “வெந்து தணிந்தது காடு திரைப்படம், நான் வழக்கமாக பண்ணும் படங்களில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார்கள். இந்த மாதிரியான படம் முதல் பார்ட்டாக இருப்பதால் நான் எதுவும் தலையிடவில்லை. அப்போது தலையிட்டு இருந்தால் சிம்பு கதையில் தலையிடுகிறார் என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் இரண்டாவது பார்ட் எழுத்தாளர் அவர்கள் எழுத வேண்டும்.
அந்த பார்ட்டாவது இன்னும் ஜெனரஞ்சகமாகவும், கமர்சியலாகவும், ரசிகர்கள் என்ஜாய் பண்ணக்கூடிய தருணங்கள் அதிகமாக இடம்பெறும் வகையிலும் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், அத்துடன் இந்த படம் கேங்ஸ்டர் உருவாகக் கூடிய போர்ஷன் அடங்கிய முதல் பாகம். அடுத்த பார்ட்டில்தான் கேங்ஸ்டர் படமாக இது இருக்கும்.!” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருவது என்பது சிம்புவின் மூலமே மீண்டும் உறுதியாகி இருக்கிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.