ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்கள் அண்மையில் இணையத்தில் வைரலாகி வந்தன. சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்தில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் புகழ் நடிப்பதாகவும் ஸ்டில்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் அண்மையில் நடைபெற்றதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், வரும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாவதாக இருந்தது. ஆனால் இந்த பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தள்ளிப் போவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
அதில், “நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது மாநாடு படத்தின் first single, நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னொரு தேதியில் first'sigle வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம். கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் இயக்குநர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு என்பதும், இந்த படத்தில் வெங்கர் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி நடித்துள்ளார் என்பதும் இவர்களின் தாயாரும் கங்கை அமரனின் மனைவியுமான மணிமேகலை (69) உடல்நலக்குறைவால் காலாமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இழப்புக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.