இளையராஜாவின் சகோதரரும் பிரபல திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான கங்கை அமரன் திரைத்துறையில் பல வெற்றிப்படங்களைத் தந்தவர். பல வெற்றிப் பாடல்களை கொடுத்தவர். அவருடைய மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி.
இதில் வெங்கட் பிரபு பிரபல இயக்குநராக அறியப்பட்டவர். சென்னை-28, கோவா, மங்காத்தா உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது சிம்புவின் நடிப்பில் மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதேபோல் பிரேம்ஜி தம்முடைய சகோதரரான வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தவர். இவரும் மாநாடு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் இவர்களின் அம்மாவும், கங்கை அமரனின் மனைவியுமான மணிமேகலை (வயது 69) சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இந்த மறைவு குறித்து திரைத் துறையினர் தொடர்ந்து இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாநாடு திரைப்படத்தின் ஹீரோவும் நடிகருமான சிலம்பரசன் (எ) சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தம்முடைய இரங்கல் பதிவை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அந்த அறிக்கையில் சிம்பு, “அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள்.
கடந்த இரண்டு வருடமாக இதற்குமுன் நட்பாக இணைந்து இருந்தாலும் இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக எளிமையாக எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் என பார்த்திருக்கிறேன். ஆனால் அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதை கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதை அறிவேன்.
அம்மாவின் இறப்பு நிச்சயம் நம்ப முடியாத, ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு. அப்பாவிற்கும், குடும்பத்திற்கும் உங்கள் அனைவருடனும் இறப்பையும் வேதனையையும் பகிர்ந்து கொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!” என பதிவிட்டுள்ளார்.