நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சிம்புவின் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் 'மாநாடு'.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெருவாரியான பாராட்டைப் பெற்று வெற்றி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்.
அடுத்தடுத்து திரைப்படங்கள்..
சிம்பு நடிக்கும் திரைப்படங்களின் அடுத்தடுத்த ரிலீஸ் வரிசையில், அவர் நீண்ட கேமியோவில் நடிக்கும், 'மஹா' திரைப்படம், ஜூலை 22ஆம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, 'வெந்து தணிந்தது காடு' மற்றும் 'பத்து தல' உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசு
இந்த நிலையில், நடிகர் சிம்புவுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் கமல்ஹாசன், பார்த்திபன், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலருக்கும் கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம், தற்போது சிம்புவுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்திருக்கிறது.
தங்கள் நாட்டின் சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் விதமாக பல பிரபலங்களுக்கு கோல்டன் விசா எனப்படும் புதிய நடைமுறையை துபாய் அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து இந்தியாவின் முக்கியமான விளையாட்டு வீரர்கள், சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள், காவல்துறை சேர்ந்த பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த விசாவைப் பெறும் நபர், 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்காலிக குடிமகனாகக் கருதப்படுவார்கள். இதனால் எந்த விசாவும் இல்லாமல் எளிதாக எப்போது வேண்டுமானாலும் துபாய்கு சென்று வரலாம். இந்த கோல்டன் விசாவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல் போதுமானது.