சென்னை: நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.
நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பலகலைகழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் இன்று (11.01.2022) கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், தலைவரும் வேந்தருமான டாக்டர்.ஐசரி கே.கணேஷ் கலந்து கொண்டார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் சிம்புவுடன் இணைந்து டாக்டர் பட்டம் பெற்றார்.
இவர்களுடன் தொழில் அதிபர் வி ஜி பி சந்தோஷமும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கலந்துகொண்டார். ஐசரி.கே.கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தாலும் தனது தந்தையின் வழித் தொடர்ச்சியாக தொடந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். சிம்புவை வைத்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்து வருகிறார்.
உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தின் காலஞ்சென்ற முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மஸ்ரீ கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள், பல பல்கலைக்கழகங்களால் கவுரவிக்கப்பட்டனர். இந்த வரிசையில் சிம்புவும் இணைந்துள்ளார்.