டபுள்மீனிங் புரொடக்ஷன்ஸ்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ மாயோன்’.
மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்த ‘அகண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான திரைப்படம் 'அகண்டா'. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத், தமிழில் அறிமுகமாகும் 'மாயோன்' படத்திலும் பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளை அமைத்திருக்கிறார். அவருடைய கடினமான உழைப்பை 'மாயோன்' பட குழுவினர் பாராட்டியுள்ளனர்.
குறிப்பாக இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். அண்மைக்காலமாக இசைஞானி இளையராஜா முன்னணி படங்களுக்கு முன்னணி இயக்குநர்களுடன் மிகவும் பிஸியாக பணிபுரிந்து வருகிறார்.
குறிப்பாக வெற்றிமாறனின் இயக்கத்திலான ‘விடுதலை’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில், மாயோன் படத்துக்காக இசைஞானி இளையராஜாவின் இசை மீண்டும் தேனிசையாய் மலர்ந்திருக்கிறது.
கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக இருக்கும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இரட்டை கலைஞர்கள் முதன்முதலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடியிருக்கிறார்கள். 'மாயோனே மணிவண்ணா..' எனத் தொடங்கும் அந்தப் பாடலை இசைஞானி இளையராஜா எழுதி இருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் பாடலுக்கு இணையதளங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதள பார்வையாளர்களையும் கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
‘மாயோனே மணிவண்ணா..’ எனத் தொடங்கும் இந்தப் பாடல், ‘மாயோன்’ படத்தின் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் திரைப்படப் பாடலாக இருந்தாலும், ரஞ்சனி & காயத்ரி ஆகியோரின் இனிமையான குரலில், பக்தி பாடலாகவும், தமிழகத்திலுள்ள இல்லங்களிலும் தவறாது ஒலிக்கக்கூடும் என திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.