ஊரடங்கு காலத்தை சமூக வலை தளங்களில் செலவு செய்த நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர்.
வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த போட்டோ சூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்ந்து வந்தார். ஸ்ருதி ஹாசன் கடைசியாக எஸ்பி ஜனநாதனின் கடைசி படமான 'லாபம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த லாபம் திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது 'NBK 107' என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 107வது படமாக உருவாகவுள்ளது. 'பலுபு' மற்றும் 'கிராக்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய ஸ்ருதி, இயக்குனர் கோபிசந்துடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும். போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் பாலகிருஷ்ணா தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.