தமிழில் “உனக்கு 20 எனக்கு 18” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பிரபலமானவர். கடைசியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசூரன் படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. தற்போது இவர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக செய்து கொண்டிருப்பார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்று (14.09.2021) திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, நடிகை ஸ்ரேயாவும் கணவர் ஆண்ட்ரோவும் கோயிலினுள்ளே முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
திருமலை திருப்பதி கோயிலினுள் இப்படி செய்து புனிதத்தை கெடுப்பது சரியா? என இந்து மத ஆர்வலர்கள், வலதுசாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே வேளையில் சிலர் நடிகை ஸ்ரேயாவுக்கு ஆதராவாகவும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.