நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்கிற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி ஹீரோ. இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குநராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர்.
விஜய்க்கு முன்பும் பின்பும் பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் மணவாழ்க்கை, திரை வாழ்க்கை பல விஷயங்களை பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவியும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் ஆகியோரிடம் விஜே அர்ச்சனா நிறைய சுவாரஸ்யமான கேள்விகளை கேட்க, அவர்களும் தங்களது நினைவலைகளை பகிர்ந்துகொண்டனர்.
இதில் பேசிய நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா, “என்னுடைய மகளைத்தான் இப்போது வரை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். மூன்றரை வயதில் மறைந்த அந்த குழந்தை இருந்திருக்கலாம் என்று இப்போது வரை எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்று உருக்கமாக குறிப்பிட்டார்.
அப்போது பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “எங்கள் எல்லோரிடமும் அந்த எண்ணம் இருக்கிறது.. நாங்கள் அனைவருமே மிஸ் பண்ணுகிறோம். விஜய்க்கு அந்த தாக்கம் இன்றுவரை இருந்து கொண்டே இருக்கிறது. எனக்கும் அந்த தாக்கம் இன்றும் இருந்துகொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் நினைக்கிறேனோ அப்போதெல்லாம் நான் அதை பற்றி ஃபீல் பண்ணுவது உண்டு. ஏன் என்றால் சில வீடுகளில் நாங்கள் பார்க்கும் பொழுது அப்பா மீது பாசமாக இருக்கும் மகள்களை காணமுடியும். அதையெல்லாம் காணும்போது எங்களுக்கு இந்த நினைவு வந்து போகும்” என்று குறிப்பிடுகிறார்.
இதேபோல் ஷோபா சந்திரசேகர் குறிப்பிடும்போது, “அவள் பிறந்த பிறகுதான் நாங்கள் நிறைய முன்னேற்றங்களை கண்டோம்.. நான் கர்ப்பமாக இருக்கும் போதுதான் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கத்தொடங்கியது. அவள் பிறந்த பிறகுதான் அவரது திரைப்படம் வெளியானது. அப்போதுதான் காசையே பார்க்க ஆரம்பித்தோம். அவள் பெயர் வித்யா. விஜய்யை டேய் அண்ணா என்று தான் அழைப்பாள், இருவருக்கும் 6 வயதுதான் வித்தியாசம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.