ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.
மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகைபுரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். இப்படி பிக்பாஸ் வீடு கலகலப்புடனும் நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் நிறைந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
வார இறுதி என்பதால் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியாளர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது ஷிவினிடம்,"மத்த போட்டியாளர்களை பார்க்க அவங்க வீட்டுல இருந்து வந்தாங்க. உங்களை பார்க்க யார் வருவார்கள் என எதிர்பார்த்தீங்க?, யாரு வந்தாங்க?" எனக் கேட்கிறார். அப்போது அமர்ந்திருந்த ஷிவின் கலங்கிய கண்களுடன்," எனக்கு தெரியும் சார் என்னை பார்க்க என் வீட்ல இருந்து 99 சதவீதம் வரமாட்டாங்கன்னு. ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு சின்ன ஆசை இருந்துச்சு" என்கிறார்.
இதனை கேட்ட கமல்ஹாசன்,"இந்த நிகழ்ச்சிக்கு நீங்க வந்ததே, உங்களை ஏற்றுக்கொள்ளும் அடுத்த கட்டத்துக்கு உங்க வீட்டை நீங்க தயார்படுத்துறதுக்கு தான்" என்கிறார். இதனையடுத்து , அஸீமிடம் ஸ்டோர் அறையில் ஒரு பொருள் இருப்பதாகவும் அதை எடுத்துவரும்படியும் கூறுகிறார் கமல். அசீமும் உடனடியாக சென்று அதனை எடுத்து வருகிறார். வண்ண காகிதங்கள் சுற்றப்பட்ட அதனை பிரித்துப் பார்க்கும் அசீம், கண்கலங்கியபடி கமல்ஹாசனுக்கு நன்றி சொல்கிறார்.