உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி சமீபத்தில் பீகாரின் முசாபர் ரயில் நிலையத்தில் இறந்த தாயை, குழந்தை ஒன்று எழுப்ப முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அந்த வீடியோ கல் மனதையும் கரைக்கும் அளவில் இருந்தது.

அந்த குழந்தையை பற்றி அடுத்த தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் நடிகர் ஷாருக்கான் குழந்தைக்கு உதவ முன் வந்துள்ளார். அவர் நடத்தி வரும் 'மீர்' பவுண்டேஷன் எனப்படும் தொண்டு நிறுவனத்தின் மூலம் குழந்தையை கண்டு அடைந்துள்ளதாகவும், குழந்தை தாத்தா பாட்டியுடன் இருப்பதாகவும், குழந்தைக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வோம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது
நடிகர் ஷாருக்கான் கூறும்பொழுது "குழந்தையை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி. பெற்றோரை இழந்த வலியை தாங்க இறைவன் குழந்தைக்கு வலிமை அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். நமது அன்பும் ஆதரவும் குழந்தைக்குத் தேவை" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நடிகர் ஷாருக்கானின் இந்த உயர்ந்த உள்ளத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.