சின்னத்திரையில் சீரியல்கள் நடித்து அதிகம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சரண்யா துராடி. ஆரம்பத்தில், செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த சரண்யா, அதன் பின்னர் விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில், பல சீரியல்கள் நடித்து, அதிகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் காசி சென்றுள்ள புகைப்படங்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக, பல புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சரண்யா துராடி வெளியிட்டுள்ளார்.
காசியில் ஹோலி
இதன் ஒரு பதிவில், "வயதான பிறகு தான் காசிக்கு செல்ல வேண்டும் என பலரும் கூறுகிறார்கள். ஆனால், ஏதோ ஒரு தீவில் கவர்ச்சியான விடுமுறையை கழிப்பதற்கு பதிலாக, ஹோலியை இந்த கங்கை நதியில் கழிக்க நினைத்தேன்" என பதிவிட்டுள்ளார்.
எரியுற பிணங்கள்
மேலும், தன்னுடைய மற்றும் ஒரு பதிவில் வாரணாசி குறித்த மொத்த பார்வையை மிகவும் விளக்கமாக சரண்யா துராடி தெரிவித்துள்ளார். "படித்துறையில் இறங்கி காலாற நடந்தால்.. ஒரு பக்கம் 24 மணி நேரமும் எரியுற பிணங்கள். அப்படியே திரும்புனா கலர் விளக்குகளால அலங்கரிக்கப்பட்ட படகில் உற்சாகமா ‘சிவ சம்போ’ கோஷம் போடுற யாத்ரீகர்கள்.. சுற்றி இருக்கும் எதை பற்றியும் பிரக்ஞை இல்லாமல், parallel universe ல் வாழும் தேசாந்திரிகள். அசுத்தமாக இருந்தாலும் புண்ணியம் என்று கங்கை நதியையே ப்ளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஊருக்கு பார்சல் கட்டும் குரூப் டூரிஸ்டுகள்.
நம்பிக்கை என்னவோ ஒண்ணு தான்
இதுக்கெல்லாம் இடையில் சாயந்திரம் கங்கையை நோக்கி ஆரத்தி நடந்த போது அங்கே படகுகளிலும் படித்துறையிலும் அமர்ந்து தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே குரலாக முழங்கிய போது ஒரு எனர்ஜி இருந்ததை மறுக்க முடியாது. எதையாவது பிடித்து கொண்டு இந்த பிறவியை கடந்திட மாட்டோமா என்ற தவிப்பு தான் பக்தியாக வெளிப்படுது. எதை நம்புகிறோம் என்பது ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடுது. ஆனால் நம்பிக்கை என்னவோ ஒன்னுதான் போல இருக்கு" என குறிப்பிட்டுள்ளார்.
இளம் நடிகை ஒருவரின் அனுபவம் தேர்ந்த கருத்துக்கள், அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது. இளம் வயதிலேயே காசி விசிட் அடித்த நடிகை சரண்யா குறித்தும் பல விதமான கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.