சென்னை: பிரபல OTT நிறுவனத்துடன் இயக்குனர் ஷங்கர் கைகோர்த்துள்ளார்!
தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பணியாற்ற ஒப்பந்தமாகி உள்ளார். இந்தியில் அந்நியன் படத்தை ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தை அடுத்து இயக்க இருக்கிறார் ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர். இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
Rc 15 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ராம்சரனின் 15வது திரைப்படமாகும். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு 50வது திரைப்படம் ஆகும். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு தமன் பிறந்த நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் தற்போது படப்பிடிப்பு நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் மூலம் பிரபல ஒடிடியான அமேசான் பிரைம் வழியாக புதிய வெப் சீரிஸை தயாரிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இறைவி, NGK, இறுதிச்சுற்று, கோலமாவு கோகிலா படங்களின் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஒப்பந்தமாகி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 6 முதல் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.