நடிகர் விவேக்கின் மறைவு இந்திய திரையுலகையும் தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மறைவுக்கு வந்திருந்த இயக்குநர் ஷங்கர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய இயக்குநர் ஷங்கர், “விவேக் சார் என்னுடன் முதன்முதலில் பாய்ஸ் படத்தில் பணிபுரிந்தார். மங்களம் சார் என்கிற கதாபாத்திரத்தை நிறைவாக செய்து கொடுத்தார். பிறகு அந்நியன் படத்தில் சாரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். சிவாஜி படத்தில் ரஜினியுடன் இணைந்து ரஜினியின் மாமாவாக நடித்திருந்தார்.
என் படங்களின் வெற்றிக்கு அவருடைய நகைச்சுவை நடிப்பு மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறது. நான் பண்ணிய முக்கியமான 10 கேரக்டர்களில் 3 கேரக்டர்கள் நீங்கள் கொடுத்தது சார் என்று என்னிடம் சொல்வார். ஆனால் அந்த கதாபாத்திரங்களை மிக சிறப்பாக செய்து கொடுத்து என் படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததற்காக நான்தான் அவருக்கு நன்றி கூற வேண்டும் என்று கூறினேன். இது எனக்கு மட்டும் இல்லாமல் தமிழ் நாட்டுக்கே பெரிய இழப்பு.
இயற்கைக்கு பெரிய இழப்பு. ஜென்டில்மேன் படத்தில் ஒரு வசனம் வரும். ‘மனிதனாகப் பிறந்தவன் குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது நட்டு விட்டுச்செல்ல வேண்டும். நாலு பேருக்கு நிழல் கொடுக்கிற மாதிர’ என்று ஒரு வசனம் வைத்திருப்பேன். விவேக் லட்சக்கணக்கான மரங்களை நட்டு விட்டுச் சென்றிருக்கிறார். அத்தனை பெரிய காரியத்தை செய்திருக்கிறார். இன்று அவருடைய மறைவுக்காக அத்தனை லட்சம் மரங்களும் கண்ணீர் விட்டு அழும் என நினைக்கிறேன்! அவர் செய்த அந்த நல்ல காரியம் அவரின் குடும்பத்தை பாதுகாக்கும். அவரின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!” என தெரிவித்தார்.
ALSO READ: விவேக் மறைவுக்கு வந்த கவுண்டமணி! இருவரின் கலைப் பயணத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?