தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த வாக்கு பதிவினைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நிகழும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக இன்று பதவி ஏற்றார்.
பதவியேற்ற முதல் நாளே மு.க.ஸ்டாலின் சில முக்கிய அரசாணைகளை வெளியிட்டிருந்தார். குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அரசின் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4000 கொரோனா நிவாரணம், சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தமது ஆணையில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் வகையில், இயக்குநர் ஷங்கர், “நம் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக அவரது ஆணையில் அறிவிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் COVID நோயாளிகளுக்கு, TN மருத்துவ காப்பீட்டுத் தொகை மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஆகியவற்றை பாராட்டுகிறேன்” என தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.